ஏப்.11-இல் வாழை சாகுபடி தொழில்நுட்ப இலவச பயிற்சி
By நாமக்கல் | Published On : 06th April 2016 03:38 AM | Last Updated : 06th April 2016 03:38 AM | அ+அ அ- |

நாமக்கல்லில் வரும் ஏப். 11-ஆம் தேதி வாழை சாகுபடி தொழில்நுட்பம், வாழை நார் பிரித்தெடுக்கும் முறைகள் குறித்து இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் என்.அகிலா வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 11-ஆம் தேதி காலை 9 மணிக்கு வாழை சாகுபடி தொழில்நுட்பம், வாழை நார் பிரித்தெடுக்கும் முறைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இப்பயிற்சி முகாமில் கன்று தேர்வு செய்யும் முறை, நிலத் தயாரிப்பு, சாதாரண, அடர் நடவு செய்யும் முறைகள், அதன் நன்மை, தீமைகள், பயிர் இடைவெளி, சொட்டு நீர்ப்பாசனம், நீர் வழி உரமிடுதல், களை நிர்வாகம், நுண்ணூட்டச்சத்துக் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முறைகள், பூச்சி, நோய் நிர்வாகம் குறித்து ஒரு நாள் பயிற்சி விரிவாக நடத்தப்படுகிறது.
இப்பயிற்சி முகாமில் வாழைநாரின் முக்கியத்துவம், வாழை நார் பிரித்தெடுப்பதற்கு மட்டை தேர்வு செய்யும் முறை, இயந்திரம் மூலம் வாழை நார் பிரித்தெடுத்தல், அதன் நன்மைகள், வாழை நாரைப் பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள், அதிலிருந்து தயார் செய்யப்படும் பொருள்கள் குறித்து விரிவாகப் பயிற்சியளிக்கப்படுகிறது.
இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள், ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்தோ அல்லது 04286- 266345, 266650 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ வரும் 10-ஆம் தேதிக்குள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.