பொங்கல் பண்டிகையை முன்னிட்டுபரமத்திவேலூரில் வெல்லம் தயாரிக்கும் பணி மும்முரம்

பரமத்திவேலூர் வட்டாரத்தில் வெல்லம் காய்ச்சும் ஆலைகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பரமத்திவேலூர் வட்டாரத்தில் வெல்லம் காய்ச்சும் ஆலைகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பொங்கல் பண்டிகையின்போது நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் பொங்கல் பரிசுப் பொருள்களில் வெல்லத்தைச் சேர்த்து வழங்கவும், அதற்காக வெல்லங்களைக் கொள்முதல் செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
பரமத்திவேலூர் வட்டத்தில் சோழசிராமணி, ஜமின் இளம்பள்ளி, ஜேடர்பாளையம், கு. அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், பெரிய சோளிபாளையம், கபிலர்மலை, பாண்டமங்கலம், அண்ணா நகர் மற்றும் பொன்மலர் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர்களில் கரும்பு பயிர் செய்யப்படுகிறது.
இந்தப் பகுதிகளில் விளையும் கரும்புகள், அனைத்தும் பரமத்திவேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சோழ சிராமணி, ஜேடர்பாளையம், அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், அண்ணா நகர், கபிலர்மலை, பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் 300-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு, கரும்பை சாறாக எடுத்து பின்னர் அச்சு வெல்லம், குண்டு வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை ஆகியவை தயார் செய்யப்படுகின்றன.
புதன்கிழமை, சனிக்கிழமைகளில் நடைபெறும் ஏலத்தில் தரத்துக்குத் தகுந்தவாறு ஏலம் விடப்படுகிறது. வெல்லத்தை ஏலம் எடுக்க பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் வந்து செல்கிறனர்.
அரசு கொள்முதல்செய்யக் கோரிக்கை:
தமிழர்களின் பண்பாட்டு விழாக்களில் முக்கியப் பங்கு வகிப்பது பொங்கல் பண்டிகை. வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து வெல்லம் காய்ச்சும் ஆலைகளில் பணி களை கட்டியுள்ளது.
இதுகுறித்து வெல்லம் காய்ச்சும் ஆலை உரிமையாளர்கள் கூறியதாவது:
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையின்போது வழங்கும் பொங்கல் பரிசுப் பொருள்களில் வெல்லமும் சேர்க்கப்பட்டிருந்தது.
இதற்காக பிலிக்கல்பாளையம் வெல்லம் ஏலச் சந்தையிலிருந்து வெல்லத்தை மொத்தமாக அரசு கொள்முதல் செய்தது. ஆனால், தற்போது பொங்கல் பொருள்களில் வெல்லத்தை வழங்காமல் கரும்பு, ஏலக்காய், பச்சரிசி, உலர் திராட்சை உள்ளிட்ட பொருள்களை மட்டுமே வழங்கி வருகின்றனர்.
வரும் பொங்கல் பண்டிகையின்போது கடந்த காலங்களைப்போல் அல்லாமல், வெல்லத்தையும் பரிசுப் பொருள்களுடன் சேர்த்து வழங்கவும், அதற்காக பிலிக்கல்பாளையம் வெல்லச் சந்தையில் சிப்பங்களைக் கொள்முதல் செய்யவும் அரசு முன்வர வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com