ராசிபுரம் பாதாள சாக்கடைத் திட்டப் பணியில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதால், நகரச் சாலைகள் குண்டும் குழியுமாக சேதமடைந்து, போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
1948-ம் ஆண்டு நகராட்சி அந்தஸ்து பெற்ற ராசிபுரம் நகராட்சி தற்போது முதல்நிலை நகராட்சியாக உள்ளது. இதில் உள்ள 27 வார்டுகளில் சுமார் 50 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். மிக குறுகலான சாலை வசதி கொண்ட ராசிபுரம் நகரம் சாலை விரிவாக்க வசதிகள் ஏதும் இல்லாததால், நெரிசல் மிகுந்த பகுதியாகவே காணப்படுகிறது.
இப் பகுதியில் ஜவுளி உற்பத்தி தொழில், அதிக அளவிலான கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இதனால் ஏற்படும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த முறையான போக்குவரத்து விதிகள், கண்காணிப்புகள் இல்லாததால், நெரிசலைத் தவிர்க்க முடியவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். இந் நிலையில், நகரைச் சுற்று சுமார் 60 கி.மீ. தொலைவிற்கு பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் நடந்து வருவதால், மேலும் வாகன நெரிசல் அதிகரித்து, விபத்துகள்நடப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. இத் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கும் பணிகள் அனைத்து சாலை சந்திப்புகளிலும் நடைபெறுவதால், பிரதான சாலைகள் மட்டுமின்றி, சிறிய சிறிய தெருக்களிலும் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதனால் மாற்று வழியில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
குண்டும் குழியுமான சாலைகள்: நகரில் அனைத்து இடங்களிலும் இதற்கான பணிகள் நடந்து வருவதால், பல்வேறு சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கின்றன.
குறிப்பாக, பழைய பஸ் நிலையத்திற்கு பஸ்கள் செல்லும் பிரதான சாலையான சுவாமி சிவானந்தா சாலையில் திட்டப் பணிகளால் வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டு, தற்போது நகரில் நெரிசல் அதிகரித்துள்ளது. இவ் வழியில் செல்ல வேண்டிய இரு சக்கர வாகனங்கள் மாற்று வழியில் சென்றாலும், குறுகிய சாலைகள் என்பதால், வாகன நெரிசல் அதிக அளவில் உள்ளது.
மேலும் கவரைத் தெரு, சின்னக்கடை வீதி, பெரியகடை வீதி, பட்டணம் சாலை, திரு.வி.க. சாலை போன்ற முக்கியச் சாலைகளில் வாகனப் போக்குவரத்து என்பது பெரும் பிரச்னையாக உள்ளது.
பாதாள சாக்கடை திட்டத்தில் தாமதம்
ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்-2013-ன் கீழ் பாதாளச் சாக்கடை திட்டப்பணிகள் துவங்க, நகராட்சி நிர்வாக துறையால் ரூ.55.42 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, குடிநீர் வடிகால் வாரியத்திடம் திட்ட அறிக்கை சமர்ப்பித்து, நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு, இதற்கான பணிகள் கடந்த மார்ச் 2015-ல் துவங்கப்பட்டன. இதற்கான பணிகள் குடிநீர் வடிகால் வாரியத்தின் மேற்பார்வையில் நடந்து வரும் நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைய வேண்டிய பணிகள் மேலும் ஆறுமாக காலம் மேற்கொள்ள அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதனால் மேலும் இப் பணிகளில் காலதாமதம் ஏற்பட்டு, வாகன நெரிசல் தொடர்ந்து ஏற்படுகிறது. இந்தப் பணிகள் குறிப்பிட்ட கால அளவான இந்த ஆண்டு அக்டோபரில் முடிக்கப்பட வேண்டும். அவ்வாறு முடிந்து அதன் பின்னர் நகராட்சியால் தார்ச்சாலைகள் நகர் முழுவதும் போடப்பட்டால் தான் வாகன போக்குவரத்து சீரடையும். அதுவரை நகரில் வாகன ஒட்டிகளுக்கு பெரும் சவால் தான் என்பதால், இந்த திட்டப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, சாலைகள் போடப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.