பயன்பாட்டுக்கு வராமலேயே சிதிலமடைந்த ஜேடர்பாளையம் அண்ணா பூங்கா படகு இல்லம்: சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி

பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையம்  அருகே காவிரியாற்று படுகை தடுப்பணை பகுதியில் அண்ணா பூங்கா மற்றும் படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. 

பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையம்  அருகே காவிரியாற்று படுகை தடுப்பணை பகுதியில் அண்ணா பூங்கா மற்றும் படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. 
இந்த பூங்கா தற்போது பராமரிப்பு இல்லாமலும், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இதுவரை திறக்கப்படாத நிலையிலும் படகு இல்லம் சிதிலமடைந்து படகுகள் அனைத்தும் நீரில் மூழ்கி கிடப்பதால் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
 பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் அமைந்துள்ள படுகையணை நாமக்கல் மாவட்டத்தையும்,  ஈரோடு மாவட்டத்தையும் இணைக்கக்கூடிய வகையில் உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை, ஜேடர்பாளையம் படுகை அணையை தவிர வேறு சுற்றுலாத் தலங்கள் இல்லாத நிலையில் நாமக்கல் மாவட்டம் மட்டும் அல்லாது கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஜேடர்பாளையம் படுகை அணை பகுதிக்கு வந்து செல்கின்றனர். 
மேலும், படுகை அணை பகுதியில் உயிருடன் பிடிக்கப்படும் மீன்கள் சுற்றுலாப் பயணிகளின் கண்முன்னரே சமைத்து தரப்படுவதால் இப்பகுதி மீன்களைச் சுவைப்பதற்காகவே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தப் படுகையணையில் ஏற்கெனவே அண்ணா சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவை மேம்படுத்த வேண்டும் எனவும், படகு இல்லம் அமைக்க வேண்டும் எனவும் சுற்றுலாப் பயணிகள் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும், சுற்றுலாத்துறையினருக்கும், பொதுப்பணித்துறையினருக்கும் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனடிப்படையில் இந்திய சுற்றுலாத் துறையின் நிதி உதவியுடன்,தமிழக சுற்றுலாத் துறை ஒப்புதலுடன் அண்ணா பூங்கா அருகே அனைத்து பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய நவீனமயமாக்கப்பட்ட படகு இல்லம், படகுகள்,  படகு சவாரி செய்வோருக்கான பாதுகாப்பு உடைகள், பூங்காவுக்குள் அணுகு சாலை, கான்கீரிட் சாலை, பூங்காவைச் சுற்றிலும் இரும்புக் கம்பியால் ஆன வேலி,  ஆண்கள், பெண்களுக்கென தனித்தனியாக குளியல் அறை, குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பூங்காவைச் சுற்றி சிற்ப வேலைப்பாடுகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகளுக்காக சுமார் ரூ. 3 கோடியே 64 லட்சத்து 80 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்த நிலையில் படகு இல்லத்தை 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1-ஆம் தேதி, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். அப்போது துறைச் சார்ந்த அதிகாரிகள் மற்றும் அ.தி.மு.க.வினர் படகு, படகு இல்லம் மற்றும் குளத்திற்கு மலர் தூவியும், படகு சவாரி செய்தும் கொண்டாடினர். ஆனால் படகு இல்லம் தொடங்கியது முதல் இதுவரை சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்படாமலேயே இருந்து வருகிறது. இந்த நிலையில் படகு இல்லத்தில் இருந்த படகுகள், அண்ணா பூங்காவில் இருந்த சிற்பங்கள், குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் ஆகியவை சிதிலமடைந்து காணப்படுகின்றன. இதனால் சுற்றுலா வரும் பயணிகள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்து வருகின்றனர். 
எனவே பொதுப்பணித் துறையினரும், மாவட்ட நிர்வாகமும் அண்ணா பூங்கா மற்றும் படகு இல்லத்தை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com