பொதுப்பணித்துறை கிடங்கிலிருந்து மணல் கடத்திய லாரிகள் சிறைபிடிப்பு

மோகனூர் அருகே பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான கிடங்கில் இருந்து மணல் கடத்திச் சென்ற லாரிகள், வியாழக்கிழமை சிறைபிடிக்கப்பட்டன.
Updated on
1 min read

மோகனூர் அருகே பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான கிடங்கில் இருந்து மணல் கடத்திச் சென்ற லாரிகள், வியாழக்கிழமை சிறைபிடிக்கப்பட்டன.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே தோப்பூரில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான மணல் கிடங்கு உள்ளது. அரசு இணையதளத்தில் முன்பதிவு செய்வோருக்கு, இங்கிருந்து லாரிகளில் மணல் ஏற்றி அனுப்பி வைக்கப்படும்.
இதில், மணல் லாரிகளில் 2  யூனிட் மணலும், டாரஸ் லாரிகளில் 3 யூனிட் மணலும் எடுத்துச் செல்ல அரசால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த மணல் கிடங்குக்கு மோகனூர் அருகே குன்னிப்பாளையம் காவிரி ஆற்றுப் பகுதியிலிருந்து, ஐந்துக்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் எடுத்து வரப்பட்டு அங்குள்ள கிடங்கில் வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் இருப்பு வைக்கப்பட்டது.
இந்த நிலையில், மணல் கிடங்கிலிருந்து ஒரு லாரி லோடுடன் வெளியே சென்றது.
அந்த லாரியில், குறிப்பிட்ட அளவுக்கும் மேலாக மணல் இருப்பதைக் கண்டு சந்தேகமடைந்த மோகனூர் ஒன்றிய திமுக பொறுப்பாளர் நவலடி மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் லாரியைத் தடுத்து நிறுத்தினர். 
லாரியின் மேலே ஏறிப்பார்த்தபோது, வழக்கத்துக்கும் மாறாக அதிகளவில் மணல் இருப்பது தெரியவந்தது. அதுமட்டுமின்றி, காவிரி ஆற்றில் இருந்து மணல் எடுத்து வரப்பட்ட லாரிகளை பார்த்தபோது, அதிலும் அளவுக்கு அதிகமாக மணல் இருப்பது தெரியவந்தது.
இதனால் ஆவேசமடைந்த மக்கள் மணல் கிடங்கை  முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து வந்த நாமக்கல் சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் காந்தி, மோகனூர் ஆய்வாளர் சுகுமார் மற்றும் போலீஸார் முற்றுகையில் ஈடுபட்டிருந்த மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகப்படியாக மணல் ஏற்றிச் சென்ற லாரிகள், மோகனூர் காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்த மணல் கடத்தல் தொடர்பாக, லாரி ஓட்டுநர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com