"சி.பி.ஐ.யை அரசியல் லாபத்துக்கு பா.ஜ.க. பயன்படுத்துகிறது'
By DIN | Published On : 01st April 2019 10:23 AM | Last Updated : 01st April 2019 10:23 AM | அ+அ அ- |

பா.ஜ.க. அரசு, சி.பி.ஐ., வருமான வரித் துறை, அமலாக்கத் துறை அதிகாரிகளை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துகிறது என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் குறிப்பிட்டார்.
நாமக்கல் மக்களவைத் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க.சார்பில் போட்டியிடும் ஏ.கே.பி.சின்ராஜை ஆதரித்து தேர்தல் பணியாற்றுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் ராசிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் எஸ்.காந்திசெல்வன் தலைமை வகித்தார். மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் வரவேற்றார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற ஈ.ஆர்.ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியது: தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கு செல்லும் இடமெல்லாம் பெரும் வரவேற்பு உள்ளது. தேர்தலில் மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.விசைத்தறித் தொழிலுக்கு மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது விசைத்தறியாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மத்திய மாநில அரசின் தவறான பொருளாதார கொள்கையால், விசைத்தறியாளர்கள் கடனை செலுத்த முடியவில்லை. இதனைத் தள்ளுபடி செய்ய முயற்சி எடுப்போம். லாரி தொழில் பாதிப்பு, டீசல், சுங்கச்சாவடி பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. மூன்றாம் நபர் காப்பீடுக் கட்டணம் அதிக அளவு உள்ளது என்பது லாரி தொழில் நடத்துபவர்களின் குற்றச்சாட்டு. இதனைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொள்ளாச்சி சம்பவத்தில் காவல்துறை எப்படி நடந்து கொண்டது என்பது மக்களுக்குத் தெரியும். இதில் முறையான விசாரணை இல்லை.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. பகலில் கூட பெண்கள் செல்லமுடியவில்லை. பா.ஜ.க. ஆட்சியில் வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, சி.பி.ஐ, போன்ற அமைப்புகளை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துகின்றனர். தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிகளுக்கு கேட்கும் சின்னம் கொடுப்பதில்லை. தேர்தல் ஆணையத்தைக் கூட பா.ஜ.க. மிரட்டுகிறது என்றார்.
முன்னதாக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், பண மதிப்பீடு இழப்பு என்ற காரணத்தால் நாட்டில் பணப் புழக்கம் இல்லாமல் போனது. இதனால் சிறு தொழில்கள் பாதித்தது. மத்திய ஆட்சியாளர்களுக்கு இது புரியவில்லை. பங்கு விலை உயர்வை சாதனையாக சொல்லிக்கொண்டுள்ளனர்.
இது யாருக்கு லாபம். இதனால் ஏழைகளுக்கு என்ன பயன். இதனால், மத்திய பா.ஜ.க.வுக்கு எதிரான அலை உள்ளது. இந்தத் தேர்தல் மு.க.ஸ்டாலினை முதல்வராக அமரவைக்கக்கூடிய தேர்தல். அப்படிபட்ட தேர்தலில் தொண்டர்கள் சிறப்பாகப் பணியாற்றிட வேண்டும் என்றார்.