மக்களுக்கு ஆதரவாக யார் செயல்படுவார்கள் என அறிந்து வாக்களிக்க வேண்டும்: அமைச்சர் பி.தங்கமணி
By DIN | Published On : 01st April 2019 10:25 AM | Last Updated : 01st April 2019 10:25 AM | அ+அ அ- |

மார்ச் 31: மக்களுக்கு ஆதரவாக யார் செயல்படுவார்கள் என அறிந்து மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி குறிப்பிட்டார்.
நாமக்கல் மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் பி.காளியப்பனுக்கு ஆதரவு கோரி, ராசிபுரம் நகரில் வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு கோரி அமைச்சர் பி.தங்கமணி பேசியது:
வியாபாரிகளுக்கு சாதகமாகத்தான் இந்த அரசு என்றும் செயல்பட்டு வருகிறது. மக்களோடு மக்களாகத் தான் இருந்து வருகிறோம். யார் மக்களுக்காக பணியாற்றுவார்கள் என்பதை அறிந்து ஆதரவு தரவேண்டும். ஜி.எஸ்.டி.யை கொண்டு வந்தது காங்கிரஸ் அரசு தான். இருந்தாலும் பலமுறை மத்திய அரசை சந்தித்துக் குறைக்க வேண்டிய பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியைக் குறைக்க நடவடிக்கை எடுத்தோம். நாங்கள் நேரிடையாகத் திட்டங்களை மத்திய அரசைக் கேட்கும் நிலையில் இருக்கின்றோம் என்பனை புரிந்து கொள்ள வேண்டும். எதிர்க்கட்சி வேட்பாளர் தி.மு.க. தலைமைக்குக் கட்டுப்பட்டு தான் நடக்க வேண்டிய சூழல் இருக்கும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். மாவட்டத்தில் நான்கு தாலுகாக்களை புதிதாக கொண்டு வந்தோம். ஒரு அரசுக் கல்லூரியை கொண்டு வந்தோம். ராசிபுரம் -திருச்செங்கோடு சாலை, மோகனூர், பரமத்திவேலூர் சாலை என பல சாலைகள் போடப்பட்டுள்ளன. ராசிபுரம் நகராட்சிக்கு மேலும் ஒரு புதிய குடிநீர்த் திட்டம் கொண்டு வருவோம் என உறுதியளித்துள்ளோம். இதனை கண்டிப்பாகச் செயல்படுத்துவோம். எனவே மக்களும், வர்த்தகர்களும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் அமைச்சர் வி.சரோஜா, பி.ஆர்.சுந்தரம் எம்.பி., வேட்பாளர் பி.காளியப்பன், அதிமுக நகரச் செயலர் எம்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குமாரபாளையத்தில்...
மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைந்துள்ளதால், மக்களிடம் சென்று வாக்குச் சேகரிப்பில் மெத்தனப் போக்கு இருக்கக் கூடாது என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
குமாரபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நகர அவைத் தலைவர் எஸ்.என்.பழனிசாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நகரச் செயலர் ஏ.கே.நாகராஜன் வரவேற்றார். அலுவலகத்தை திறந்து வைத்து அமைச்சர் பி.தங்கமணி பேசுகையில், தமிழகத்திலேயே குமாரபாளையம் நகராட்சியில் முதல்முறையாக புதைவடக் கம்பிகள் மூலம் மின்சாரம் கொண்டு செல்லும் திட்டம் முதல்கட்டமாக ரூ.50 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இத்திட்டம் நிறைவேற ரூ.200 கோடி தேவைப்படும் நிலையில் வரும் இரு ஆண்டுகளில் முழுமையாக நிறைவேற்றப்படும்.
குமாரபாளையம் நகர மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், சேதமடைந்த சாலைகள் ரூ.20 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. தலைமையில் மாபெரும் கூட்டணி அமைக்கப்பட்டு மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டுள்ளோம். பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் சேர்ந்துள்ளதால் மெத்தனத்தனப் போக்குடன் செயல்படக் கூடாது.
தோழமைக் கட்சியினருடன் வீடு வீடாகச் சென்று அ.தி.மு.க. அரசின் சாதனைகளைக் கூறி வாக்குகள் சேகரிக்க வேண்டும். நாட்டைப் பாதுகாக்க வலிமையான தலைவர் வேண்டும் என்பதால் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளோம். ஆனால், திமுக கூட்டணிக் கட்சிகளில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதே முடிவு செய்ய முடியவில்லை. நாட்டின் பாதுகாப்பு முக்கியம், தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதால் வலிமையான தலைமை வேண்டும் என மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றார்.
அதிமுக முன்னாள் நகரச் செயலர் எம்.எஸ்.குமணன், தொழிலதிபர் பி.இளங்கோ, நம்ம குமாரபாளையம் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஓம் சரவணா மற்றும் பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.