முட்டை உற்பத்தி மையத்தைக் கைப்பற்றப்போவது  யார்?

 குளுமையும்,  இயற்கையின் அழகையும் கொண்ட கொல்லிமலை, பல்வேறு மாநிலத்தவரும் தேடிவந்து வணங்கிச் செல்லும் ஆஞ்சநேயர் கோயில்,  
முட்டை உற்பத்தி மையத்தைக் கைப்பற்றப்போவது  யார்?


 குளுமையும்,  இயற்கையின் அழகையும் கொண்ட கொல்லிமலை, பல்வேறு மாநிலத்தவரும் தேடிவந்து வணங்கிச் செல்லும் ஆஞ்சநேயர் கோயில்,  உலகம் முழுவதும் புகழ் பரப்பும் கோழி முட்டை,  எல்.பி.ஜி.டேங்கர்,  டிரெய்லர், டாரஸ்,  ரிக் போன்ற சரக்கு வாகனங்கள்,   கரும்பு, வாழை, வெற்றிலை, மிளகு, பழங்கள் உற்பத்தியின் தனிப்பெரும் மையம் என்பன உள்ளிட்ட அடையாளங்களைக் கொண்டது நாமக்கல் தொகுதி. 
ஒருங்கிணைந்த  சேலம் மாவட்டத்தில் இடம் பெற்றிருந்த, தருமபுரி,  நாமக்கல்,  கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் பின்னர் தனி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன.  1997 ஜனவரி 1 - ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் உதயமானது.  சிறு, குறு மற்றும் பெருந்தொழில்களைக் கொண்ட இம் மாவட்டம், தனியாக பிரிக்கப்படும் முன்பு, திருச்செங்கோடு,  ராசிபுரம் (தனி) என்ற இரு மக்களவைத் தொகுதிகளைக் கொண்டிருந்தது. 
திருச்செங்கோடு தொகுதி
1952 முதல் 2004 தேர்தல் வரையில்,  சங்ககிரி (தனி),  மொடக்குறிச்சி,  ஈரோடு, எடப்பாடி,  கபிலர்மலை,  திருச்செங்கோடு உள்ளிட்ட சட்டப்பேரவைத் தொகுதிகள் இதில் இடம் பெற்றிருந்தன.  இங்கு நடைபெற்ற 14 தேர்தல்களில், 1952-இல் நடைபெற்ற தேர்தலில் எஸ்.கே.ராமசாமி என்ற சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றார்.   அதன்பின்,  1957,  1962 - இல் சுப்பராயன் (காங்கிரஸ்), 1967 - இல் க.அன்பழகன் (திமுக),  1971 - இல் எம்.முத்துசாமி (திமுக),  1977-இல் ஆர்.குழந்தைவேலு (அதிமுக),  1980-இல் எம்.கந்தசாமி (திமுக), 1984-இல் பி.கண்ணன் (அதிமுக),  1989-இல் கே.சி.பழனிசாமி (அதிமுக),  1991-இல் கே.எஸ்.சௌந்தரம் (அதிமுக),  1996-இல் கே.பி.ராமலிங்கம் (திமுக), 1998-இல், எடப்பாடி கே.பழனிசாமி  (அதிமுக),  1999-இல் எம்.கண்ணப்பன் (மதிமுக), 2004-இல் சுப்புலட்சுமி ஜெகதீசன் (திமுக) ஆகியோர் வெற்றி பெற்றனர்.  இங்கு,  தி.மு.க.- அ.தி.மு.க. தலா 5 முறையும்,  காங்கிரஸ் 2 முறையும்,  ம.தி.மு.க.,  சுயேச்சை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. இதில், குறிப்பிடத்தக்கவர்களாக,  சென்னை ராஜதானியாக இருந்தபோது அதன் முதல்வரான பி.சுப்பராயன்,  தற்போது, தமிழக முதல்வராக உள்ள எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் இத் தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
ராசிபுரம் தொகுதி:   1977-இல் ராசிபுரம் (தனி)  மக்களவைத் தொகுதி உருவானது.  இதில்,  ராசிபுரம்,  நாமக்கல் (எஸ்.சி.), சேந்தமங்கலம்(எஸ்டி), ஆத்தூர், தலைவாசல்(எஸ்சி),  சின்னசேலம் ஆகிய 6 தொகுதிகள் இடம் பெற்றிருந்தன.  1977,  1980, 1984, 1989,  1991 ஆகிய 5 தேர்தல்களில்,  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.தேவராஜன் வெற்றி பெற்றார்.  1996 தேர்தலில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.கந்தசாமி,  1998, 1999 தேர்தலில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த டாக்டர் வெ.சரோஜா,  2004 தேர்தலில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.ராணி உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
நாமக்கல் தொகுதி உதயம்
  2009-ஆம் ஆண்டு மாவட்ட தலைநகர் என்ற அடிப்படையில், நாமக்கல் தொகுதி உதயமானது.  இதில், நாமக்கல்,  திருச்செங்கோடு, சேந்தமங்கலம்,  ராசிபுரம், பரமத்திவேலூர், சங்ககிரி (சேலம் மாவட்டம்) ஆகிய தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.   நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் தொகுதி, ஈரோடு மக்களவைத் தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.  கடந்த  2009 - தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட காந்திசெல்வன் வெற்றி பெற்றார்.  அவரை எதிர்த்துப் போட்டியிட்ட, அ.தி.மு.க. வேட்பாளர் வைரம் தமிழரசி தோல்வியடைந்தார்.
2014 தேர்தலில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த பி.ஆர்.சுந்தரம் 5,63,272 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார்.  அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் செ.காந்திசெல்வன் 2,68,898 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார்.  மேலும், எஸ்.கே.வேல் (தேமுதிக)- 1,46,882,  ஜி.ஆர்.சுப்பிரமணியன் (காங்கிரஸ்) - 19,800 வாக்குகள் பெற்றனர்.   இவர்கள் தவிர,   23 பேர் போட்டியிட்டனர்.  நோட்டாவுக்கு மட்டும்  16,002 வாக்குகள் கிடைத்தன.  தற்போது இத் தொகுதிக்கு 3 -ஆவது தேர்தல் நடைபெறுகிறது.  அ.தி.மு.க., கொ.ம.தே.க.  வேட்பாளர்கள் உள்பட 29 பேர் போட்டியிடுகின்றனர்.  இங்கு, கொங்கு வேளாளக் கவுண்டர், நாட்டுவக் கவுண்டர், செங்குந்த முதலியார், வன்னியர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினத்தவர்கள் அதிகம் உள்ளனர்.
தொகுதி நிலவரம்
நாமக்கல் மக்களவைத் தொகுதியில்,  அ.தி.மு.க., வேட்பாளராக டிஎல்எஸ் பி.காளியப்பன் போட்டியிடுகிறார். மாவட்ட பொருளாளரான இவர், அக்கட்சியின் முன்னோடிகளில் ஒருவர். கடந்த 2014 தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கேட்டார். அப்போது பி.ஆர்.சுந்தரத்துக்கு, முதல்வராக இருந்த ஜெயலலிதா வாய்ப்பு வழங்கினார். இம்முறை வாய்ப்பு கேட்டு மனு அளித்ததன் அடிப்படையில், அவருக்கு சீட் கிடைத்தது.  அமைச்சர் பி.தங்கமணி மற்றும் 5 தொகுதிகளில் உள்ள அ.தி.மு.க., சட்டப்பேரவை உறுப்பினர்கள், அ.தி.மு.க. தொகுதியை மீண்டும் கைப்பற்ற தீவிர பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளராக களமிறங்கியுள்ளார் ஏ.கே.பி.சின்ராஜ்.  தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர் சங்கத் தலைவராக இருப்பதாலும், தி.மு.க. கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாலும், வெற்றி தன் வசமாகும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.  மேலும்,  கொங்கு மண்டலத்தில் உள்ள கொ.ம.தே.க.வினர் நாமக்கல் தொகுதியில் அவரது வெற்றிக்காகப் பாடுபடுகின்றனர். அண்மையில் நடத்திய உலக கொங்கு தமிழர் மாநாட்டு வெற்றியை, இத் தேர்தல் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்பதில் அக் கட்சியினர் உறுதியாக உள்ளனர். 
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளராக, பரமத்திவேலூரைச் சேர்ந்த, அக் கட்சியின் மேற்கு மாவட்டச் செயலாளர் பி.பி.சாமிநாதன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க.வுக்கு மாற்றாக தங்களுடைய கட்சி சின்னத்துக்கு வாக்குகள் சேரும்.  அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் அ.ம.மு.க. வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் அவர் உள்ளார்.  டி.டி.வி.தினகரன் மட்டுமே பிரசாரம் செய்து சென்றுள்ள நிலையில்,  அ.ம.மு.க.வினர் தங்களுடைய பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கோவையைச் சேர்ந்தவரான மக்கள் நீதி மய்ய வேட்பாளர் ஆர்.தங்கவேலு, மனு தாக்கலுக்கு பின்பு பிரசாரத்தில் போதிய ஆர்வம் காட்டவில்லை. ரசிகர் மன்றத்தினரை மட்டுமே நம்பியுள்ளார்.  வரும் 15-ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்துக்கு அக் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்ய வருவதாகக் கூறப்படுகிறது.  
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பி.பாஸ்கரனும், மினி சரக்கு வாகனங்களில் பதாகைகளை கட்டி, ஒலிபெருக்கி மூலம் கிராமங்கள் தோறும் சென்று பிரசாரம் செய்கிறார். இவர்கள் தவிர, பிரஷர் குக்கர் சின்னத்தில் போட்டியிடும்  சுயேச்சை வேட்பாளரான என்.கே.எஸ்.சக்திவேல், தன்னுடைய சக்தி கல்வி, கலாசார அறக்கட்டளை உறுப்பினர்கள் மூலம் தொகுதி வாரியாகச் சென்று பிரசாரம் செய்து வருகிறார்.  மற்ற சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது தொகுதிக்குள் ஆங்காங்கே துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்குச் சேகரித்து வருகின்றனர்.  நடைபெறவுள்ள தேர்தலில் மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  தேர்தலுக்கு இன்னும் நான்கு நாள்களே உள்ளதால்,  முட்டை உற்பத்தி மையமான, நாமக்கல் கோட்டையை கைப்பற்றுவதற்கான வேட்பாளர்களின் பிரசாரம் தீவிரமாகியுள்ளது.
எம்.மாரியப்பன்

லாரி கூண்டு கட்டும் தொழில்
நாமக்கல்  சுற்று வட்டாரத்தில் நூற்றுக்கணக்கான லாரி கூண்டு கட்டும் சிறு, குறு தொழில்கூடங்கள் இயங்கி வருகின்றன.  பல்வேறு மாநிலத்தவரும் நாமக்கல்லிலேயே லாரி கூண்டு கட்டுவதற்கு வருகின்றனர்.  மாதந்தோறும், 50, 100 லாரிகள் கூண்டு கட்டி வந்த நிலையில்,  தற்போது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள தரக் கட்டுப்பாடு தொடர்பான  ஏ.ஆர்.ஐ., சான்றிதழ் கட்டாயத்தால்,  கூண்டு கட்ட வரும் லாரிகள் எண்ணிக்கை வெகுவாகச் சரிந்து விட்டது.  
இவை தவிர,  பரமத்திவேலூரில் வெற்றிலை, வாழை விவசாயம் அதிகம் செய்யப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன் இங்கு வெற்றிலை ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வந்தது. சொந்தக் கட்டடம் இல்லாததைக் காரணம்காட்டி, கோவைக்கு ஆராய்ச்சி மையத்தை மாற்றி விட்டனர்.  இதனால் வெற்றிலை தொடர்பான பாதிப்புகள் குறித்து விவசாயிகளால் அறிந்து கொள்ள முடியவில்லை.  வெற்றிலையைப் பதடுப்படுத்துவதற்கான குளிர்பதனக் கிடங்கு இல்லாததால்,  குறிப்பிட்ட நாள்களுக்கு பின் அவை அழுகி வீணாகின்றன.  குளிர்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும்.  வெற்றிலைக்குரிய விலையை அரசே நிர்ணயிக்க வேண்டும்.  வங்கிகள் தேவையான விவசாயக் கடன்களை வழங்க வேண்டும் என்பன அப் பகுதி விவசாயிகளின் கோரிக்கை.  மேலும், திருமணிமுத்தாறு சீரமைப்புத் திட்டம், திருச்செங்கோடு போர்வெல்,  விசைத்தறி தொழில் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் மக்களிடையே உள்ளது.
தொகுதி பிரச்னைகள்
நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.  இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. அவ்வப்போது வெளியாகும் பறவைக் காய்ச்சல் தொடர்பான தகவல்களால், 15 நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி தடைபட்டுள்ளது.  தற்போது 3 நாடுகளுக்கு மட்டுமே முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது.  அந்நியச் செலாவணியை அதிகம் ஈட்டித் தரும் கோழி முட்டைக்கு, பறவைக் காய்ச்சல் அற்ற தனி மண்டலம் என்ற பெயருடன் நாமக்கல்லில் புதிய மண்டலம் உருவாக்கப்பட வேண்டும்.  இதன் மூலம் ரூ.150 கோடிக்கான முட்டை ஏற்றுமதி ரூ.2 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும்.  மேலும்,  முட்டைகளைப் பாதுகாக்க குளிர்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும்.  10 ஆண்டுகளுக்கும் மேலாக இம் மாவட்ட கோழிப் பண்ணையாளர்கள் இக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.  ஆனால் இதுவரை நிறைவேற்றப்படாமலேயே உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com