ஜி.பி.எஸ். கருவி பொருத்திய 136 வாகனங்கள் தயார்
By DIN | Published On : 17th April 2019 02:44 AM | Last Updated : 17th April 2019 02:44 AM | அ+அ அ- |

நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குள் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒவ்வோர் வாக்குச் சாவடிக்கும் எடுத்துச் செல்வதற்காக, ஜிபிஎஸ் கருவி பொருத்திய 136 வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.
நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஏப். 18) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. இத்தொகுதிக்குள்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் ஒப்புகைச்சீட்டு இயந்திரம் கொண்டு செல்வதுடன், தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களையும் அந்தந்த வாக்குச் சாவடிக்கு அழைத்துச் செல்வதற்காக 136 சிறிய, பெரிய சரக்கு வாகனங்கள் தயார் நிலையில் நாமக்கல் ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு செல்லும் வாகனங்கள் வழிமாறி சென்றால், அதைக் கண்டறியவே ஒவ்வோர் வாகனத்திலும் இக்கருவியானது பொருத்தப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு தொகுதி வாரியாக வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. சங்ககிரி தொகுதிக்கான வாகனங்கள், சேலம் மாவட்ட நிர்வாகம் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஈரோடு தொகுதியில் இடம் பெற்றுள்ள குமாரபாளையம் தொகுதிக்கு நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மூலம் வாகனங்கள் அனுப்பப்படுகின்றன.
அதன்படி, ராசிபுரம் தொகுதியில், 103 இடங்களில் உள்ள 261 வாக்குச் சாவடிகளுக்கு 22 வாகனங்கள் இயக்கப்படுகின்றன. சேந்தமங்கலம் தொகுதியில் 132 இடங்களில் 283 வாக்குச் சாவடிகளுக்கு, 26 வாகனங்களும், நாமக்கல் தொகுதிக்கு 130 இடங்களில் 287 வாக்குச் சாவடிகளுக்கு 24 வாகனங்களும், பரமத்தி வேலூர் தொகுதிக்கு 122 இடங்களில் 254 வாக்குச் சாவடிகளுக்கு 19 வாகனங்களும், திருச்செங்கோடு தொகுதிக்கு 109 இடங்களில் 261 வாக்குச் சாவடிகளுக்கு 23 வாகனங்களும், குமாரபாளையம் தொகுதிக்கு, 65 இடங்களில் 280 வாக்குச் சாவடிகளுக்கு, 22 வாகனங்களும் என மொத்தம் 661 இடங்களில் 1,626 வாக்குச் சாவடிகளுக்கு, 136 வாகனங்கள் பிரித்து அனுப்பப்படுகின்றன.
மூன்று நாள்கள் தொடர்ச்சியாக வாக்குச் சாவடி பகுதியில் முகாமிட்டிருக்கும் இந்த வாகனங்கள், வாக்குப்பதிவு நிறைவடைந்து இயந்திரங்களை பாதுகாப்புடன் திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஒப்படைக்கும் வரையில் பயன்பாட்டில் இருக்கும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...