குடிநீர் பிரச்னையை தீர்க்கக் கோரி பொதுமக்கள் மனு
By DIN | Published On : 26th April 2019 03:00 AM | Last Updated : 26th April 2019 03:00 AM | அ+அ அ- |

திருச்செங்கோடு ஒன்றியம் வரகூராம்பட்டி கிராமம் அம்மையப்பா நகரில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் இருப்பதாகவும், அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும் பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
அம்மையப்பாநகரில் சுமார் 60 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இந்தக் குடியிருப்புப் பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்யப்படவில்லை. முக்கியமாக குடிநீர் வசதி சரியாக வழங்கப்படுவதில்லை. போர்வெல் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வசதி இருந்தும் முறையாக தண்ணீர் விநியோகிக்கப்படுவதில்லை. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி ஐந்து ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதுகுறித்து கிராம சபை கூட்டத்தில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, துரிதமாக, உரிய நடவடிக்கை எடுத்து முறையாக தண்ணீர் கிடைக்க செய்யுமாறு ஊர்பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என மனுவில் தெரிவித்துள்ளனர்.