நாமக்கல்லில், கோடை வெயிலுக்கு இதமாகவும், காற்றோட்டமான இடத்தில் போட்டு உறங்கவும், வண்ணமயமான கயிற்றுக் கட்டில் விற்பனை மும்முரமாக நடைபெறுகிறது.
புதியன புகுதலும்; பழையன கழிதலும் என்ற காலம் மாறிவிட்டது. ஆரோக்கியத்தை மறந்து வேலைகளை எளிதாக முடிக்க வீடுகளில் இருக்கும் பொருள்களில் பல இயந்திரமயமானது. இதனால் ஆயுளில் பாதி குறைந்ததுடன், நோய்க்கு விடை தெரியாமல் மருத்துவமனைகளை நாடிச் செல்லும் சூழல் மக்களிடையே ஏற்பட்டது. நோயை விரட்ட இயற்கை சார்ந்தவையே என்றைக்கும் உதவும். பல ஆண்டுகளுக்கு முன்பு மரத்தடியில் கயிற்றுக் கட்டிலைப் போட்டு உறங்குவதையே தனி சுகமாக மக்கள் கொண்டிருந்தனர். காலமாற்றத்தில், வெப்பத்தை உடல் மீது திணிக்கும் மின் விசிறிகள், மூச்சுத் திணறலுக்குள்ளாக்கும் குளிர்சாதன கருவிகள் புகுந்தன.
ஆனால் தற்போது இயற்கையுடன் ஒன்றிவாழவே பலரும் ஆசைப்படுகின்றனர். அந்த வகையில் கயிற்றுக் கட்டில்களும் மீண்டும் வீடுகளுக்குள் இடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டன. நாமக்கல் பகுதியில் இரும்புக் கம்பிகளில் வண்ணக் கயிறுகளை கட்டி, கட்டிலாக சாலையோரம் விற்பனைக்கு வைத்துள்ளனர். எளிதாக எடுத்துச் செல்லும் வகையில் உள்ள இக்கட்டில் ரூ.1,500 என விற்பனை செய்யப்படுகிறது. நாமக்கல்-அலங்காநத்தம் சாலையில், ஒவ்வொரு மரத்தடியிலும் உடனுக்குடன் கயிறுகளை கட்டி விற்பனை செய்து கொடுக்கின்றனர்.
இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் சுப்பிரமணி கூறியது:
இருவர் படுத்து உறங்கும் வகையில் வண்ண கயிறுகளைக் கொண்டு பின்னல் போடுகிறோம்.
இரும்புக் கம்பிக் கொண்டு கால்கள் அமைத்து, கயிறு பின்னல் போட்டுக் கட்டில் விற்பனை செய்தால், ரூ.300 வரை லாபம் கிடைக்கும்.
இந்தக் கட்டில்களை பெரும்பாலானோர் வாங்கிச் செல்கின்றனர். மரத்தடியில் அவற்றைப் போட்டு உறங்கினால் உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.