பாவை கல்வி நிறுவனங்களில் விளையாட்டு விழா
By DIN | Published On : 26th April 2019 02:58 AM | Last Updated : 26th April 2019 02:58 AM | அ+அ அ- |

பாவை கல்வி நிறுவனங்களில் விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் என்.வி.நடராஜன் தலைமை வகித்தார். மாணவி ஸ்வேசிகா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சேலம் சம்பந்தம் குரூப் ஆப் ஸ்பின்னிங் மில்ஸ் நிறுவனத்தின் தலைவர், நிர்வாக இயக்குநரும், சேலம் எஸ்.பி.எம்.எம். மருத்துவமனையின் தலைமை நிர்வாகியுமான எஸ்.தேவராஜன் பங்கேற்று விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்துப் பேசினார்.
விழாவில் பேசிய அவர், விளையாட்டு உடல் நலம் மட்டுமின்றி மன வலிமையையும் மேம்படுத்துகிறது. விளையாட்டில் நாம் செயல்படுத்தும் திட்டமிடல், புத்திக்கூர்மை, இலக்கை அடைதல், உற்றுநோக்கும் திறன், சவால்களை எதிர்கொள்ளுதல், சூழ்நிலைகளை கையாளும் திறன், பொறுமை போன்ற குணங்கள் விளையாட்டில் மட்டுமல்லாமல் வாழ்விலும் பயன்படுகின்றன. மேலும் நவீன வாழ்க்கை முறையில், விளையாட்டு ஆரோக்கியத்தினையும், மன அமைதியையும் கொடுக்கிறது. கல்வியுடன் விளையாட்டுத் துறையிலும் புதுமைகளை உருவாக்க முடியும். எனவே விளையாட்டு வீரர்களாகிய நீங்கள் அனைத்துப் பரிணாமங்களிலும் உங்கள் பொறுப்பினை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.
அண்ணா பல்கலைக்கழக விளையாட்டுத் துறை சார்பில் 2018-2019 ஆம் கல்வி ஆண்டிற்கான அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள 524 பொறியியல் கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பாவைக் கல்லூரி தொடர்ந்து ஐந்தாவது முறையாக 780 புள்ளிகளைப் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து சிறப்பு விருந்தினர் எஸ்.தேவராஜன், இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஆணழகன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாணவர் ஜித்து உள்பட, இக்கல்வியாண்டில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் பதக்கங்களையும், கோப்பைகளையும் வழங்கினர்.