பொத்தனூர் காவிரி ஆற்றுப் பகுதியில் குளிப்பதற்குத் தடை
By DIN | Published On : 26th April 2019 02:59 AM | Last Updated : 26th April 2019 02:59 AM | அ+அ அ- |

பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் காவிரியாற்றில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து பொத்தனூர் காவிரி ஆற்றில் குறிப்பிட்ட இடங்களில் குளிப்பதற்குத் தடை செய்யப்பட்டுள்ளதாக பொதுப் பணித் துறையினர் அறிவித்துள்ளனர்.
பொத்தனூர் காவிரியாற்றில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட ஆறு பேர் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது தண்ணீரில் விழுந்த சிறுமியை மீட்கச் சென்ற போது ஒருவரை ஒருவர் காப்பாற்றும் முயற்சியில் காவிரியாற்றில் குழியில் சிக்கி அனைவரும் உயிரிழந்தனர். இச் சம்பவம் அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், பொதுப் பணித் துறையினர் பொத்தனூர், பரமத்தி வேலூர் உள்ளிட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் குறிப்பிட்ட இடங்களில் குளிப்பதற்குத் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளனர். அந்த அறிவிப்பில், இப்பகுதி மணற்பாங்கு மற்றும் சுழல் நிறைந்த பகுதி என்பதால் சுழல்களில் சிக்கி பலர் இறந்துள்ளனர். எனவே பொதுமக்கள் காவிரியாற்றின் உட்பகுதி மற்றும் ஆழமான பகுதிக்குச் செல்ல வேண்டாம் எனவும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொதுப் பணித் துறையினர் எச்சரித்து அறிவிப்பு பலகைகளை வைத்துள்ளனர்.