கோகுல்ராஜ் தோழி பிறழ் சாட்சி அளித்ததாக வழக்கு: விசாரணை பிப். 20-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
By DIN | Published On : 12th February 2019 08:55 AM | Last Updated : 12th February 2019 08:55 AM | அ+அ அ- |

பிறழ்சாட்சி அளித்ததாக கோகுல்ராஜின் கல்லூரி தோழி மீது சிபிசிஐடி போலீஸார் தொடர்ந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நாமக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
சேலம் மாவட்டத்துக்குள்பட்ட ஓமலூரை சேர்ந்தவர் கோகுல்ராஜ்(23). பொறியியல் பட்டதாரியான இவரது கொலை வழக்கு தொடர்பான சாட்சி விசாரணை நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இதுவரை கோகுல்ராஜின் தாய் சித்ரா, சகோதரர் கலைச்செல்வன், கோகுல்ராஜின் தோழி சுவாதி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் சாட்சியம் அளித்துள்ளனர்.
இந்த வழக்கில் கோகுல்ராஜின் கல்லூரி தோழி சுவாதி அரசு தரப்பில் முக்கிய சாட்சியாக கருதப்பட்டு வந்தார். ஆனால் அவர் பிறழ் சாட்சியம் அளித்ததாக சிபிசிஐடி போலீஸார் நாமக்கல் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்1 இல் மனுதாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தனபால், கோகுல்ராஜின் கல்லூரி தோழியான சுவாதி திங்கள்கிழமை ஆஜராக அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டார். ஆனால் திங்கள்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சுவாதி ஆஜராகவில்லை. இதனையடுத்து வரும் 20 ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.