திருச்செங்கோட்டில் மின்கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு
By DIN | Published On : 12th February 2019 08:51 AM | Last Updated : 12th February 2019 08:51 AM | அ+அ அ- |

திருச்செங்கோடு அருகே ஏமபள்ளி மலைபாளையத்தில் மின் கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
கேரளத்தில் இருந்து கர்நாடகத்துக்கு தமிழகம் வழியாக மின்சாரம் கொண்டு செல்ல மின் கோபுரங்களை அமைக்கும் பணியை பவர் கிரிட் நிறுவனம் செய்து வருகிறது .
விளைநிலங்களின் வழியாக மின் கோபுரங்கள் அமைக்க அளவு எடுக்கும் பணி நடைபெற்றுவரும் நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் போராடிவருகின்றனர்.
இந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்துக்குள்பட்ட திருச்செங்கோடு அருகேயுள்ள ஏமபள்ளி மலைபாளையத்தில் விவசாயி துரைசாமி மனைவியின் மயிலாம்பாளுக்குச் சொந்தமான நிலத்தில் திங்கள்கிழமை அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.
அப்போது, 56 சதுர மீட்டர் மட்டுமே எடுப்பதாகத் தெரிவித்துவிட்டு 155 சதுர மீட்டர் பரப்பளவில் நிலம் எடுக்க அளவீடு செய்ததால் விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து, பணிகளை நிறுத்தும்படி கூறினர்.
தகவலறிந்து அங்கு சென்ற டிஎஸ்பி சண்முகம், "அளவு எடுக்கும் பணியை தடுக்கக் கூடாது. ஆட்சேபனை இருந்தால் வருவாய்த் துறையினரிடம் புகார் தெரிவிக்கலாம். கட்டுமானப் பணியின்போது கூடுதலான இடத்தை ஆக்கிரமிப்பு செய்தாலும் புகார் செய்யலாம் என்று கூறினார்.
இதையடுத்து, விவசாயிகள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.