மாவட்ட திட்டக் குழுக்களில் தொண்டு நிறுவனங்களுக்கும் பிரதிநிதித்துவம்: அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல்
By DIN | Published On : 12th February 2019 08:57 AM | Last Updated : 12th February 2019 08:57 AM | அ+அ அ- |

பல ஆண்டுகள் சமூக மேம்பாட்டு பணிகளில் அனுபவம் பெற்ற தொண்டு நிறுவனங்களை மாவட்ட திட்டக் குழுக்களில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மோகனூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான கலந்தாய்வு கூட்டத்துக்கு, மாநில பொறுப்பாளர் சதீஷ்பாபு தலைமை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: அரசின் அனைத்துத் துறைகளிலும் செயல்படுத்தும் திட்டங்களில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அரசின் நலத் திட்டங்களின் பயன்களைக் கொண்டு சேர்ப்பதில் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள்(என்ஜிஓ)முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் அதற்கான அங்கீகாரத்தை என்ஜிஓக்கள் பெற முடியவில்லை. கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தும் திட்டங்களில் என்ஜிஓக்கள் உதவி செய்யும் நிறுவனமாக அங்கீகரிக்கப்படுவதில்லை. பெருகி வரும் தொண்டு நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்களை முறைப்படுத்த வேண்டும். பல ஆண்டுகள் சமூக மேம்பாட்டு பணிகளில் அனுபவம் பெற்ற தொண்டு நிறுவனங்களை மாவட்ட திட்டக்குழுவில் இடம் பெறச்செய்ய வேண்டும். அனைத்து அரசு துறைகளிலும் அங்கீகாரம் பெற்ற அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் பங்களிóப்பினை உறுதிப்படுத்த வேண்டும். அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு என வள ஆதார பயிற்சி மையம், மாவட்டம் தோறும் ஏற்படுத்த வேண்டும். அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் மூலம் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.