ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு - லஞ்ச ஒழிப்புத் காவல்துறையினர் நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் வராத ரூ.2 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக மோட்டார் வாகன ஆய்வாளர் உள்ளிட்ட 9 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சேலம் சாலையில் உள்ள முத்துக்காளிப்பட்டியில் செயல்பட்டு வருகிறது. இங்கு இடைத்தரகர்கள் நடமாட்டம் அதிக அளவில் இருப்பதாக எழுந்த புகார்களின்பேரில், நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு- லஞ்ச ஒழிப்புத் துறையின் டிஎஸ்பி ஜெயக்குமார், காவல் ஆய்வாளர் நல்லம்மாள் உள்ளிட்டோர் திங்கள்கிழமை சோதனை நடத்தினர். இதையடுத்து, அலுவலகப் பணியாளர்கள், இடைதரகர்கள், வாகனங்கள் பதிவு சான்று பெற வந்தவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர், ஊழியர்கள், இடைத்தரகர்களிடம் சுமார் ரூ.2 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, அலுவலகத்தின் கதவுகள் மூடப்பட்டு, சுமார் 7 மணிநேரம் விசாரணை நடைபெற்றது. அலுவலகப் பணிகளும் ஏதும் நடைபெறவில்லை.
இதுதொடர்பாக மோட்டார் வாகனஆய்வாளர் சண்முகா ஆனந்த், அலுவலக உதவியாளர் சக்தி, தற்காலிக ஊழியர் சுரேஷ், இடைத்தரகர்கள் ரவி, செந்தில்குமார், குப்புராஜ், குப்புசாமி, சாகுல்ஹமீது, முத்துசாமி ஆகிய 9 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.