குடியிருப்புக்கு பட்டா வழங்க வலியுறுத்தல்
By DIN | Published On : 12th February 2019 08:54 AM | Last Updated : 12th February 2019 08:54 AM | அ+அ அ- |

சாலை விரிவாக்கத்தின்போது வீடுகளை இழந்தவர்களுக்கு வழங்கப்பட்ட மாற்று இடத்துக்கு பட்டா வழங்க வேண்டும் என ஜெயந்தி காலனியைச் சேர்ந்தோர் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் சமூக ஆர்வலர் ரமேஷ் தலைமையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வருகை தந்தனர். பின்னர், அவர்கள் ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம் அளித்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக, புதன்சந்தை அருகே பல வீடுகள் கையக்கப்படுத்தப்பட்டன. இதற்காக வேறு இடத்தில்(ஜெயந்தி காலனி) அளிக்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. பட்டா இல்லாதால் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, மின் இணைப்பு உள்ளிட்ட வசதிகளை பெற முடியவில்லை. இதனால் அரசு நலத் திட்ட உதவிகளையும் பெற முடியவில்லை.
மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் இங்கு குடியிருக்கிறார் அவருக்கும் எந்த நலத்திட்ட உதவியும் கிடைக்கவில்லை. இதுபோல் இப்போது குடியிருக்கும் பகுதியில் தெருவிளக்கும் இல்லை. இதனால் எங்கள் குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கவும், தெருவிளக்கு, குடியிருப்புகளுக்கு மின் வசதியும் செய்து கொடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...