ஆர்.புதுப்பட்டி - பட்டணம் பகுதியில் திண்ணை பிரசார ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 04th January 2019 08:56 AM | Last Updated : 04th January 2019 08:56 AM | அ+அ அ- |

ஆர்.புதுப்பட்டி, பட்டணம் ஆகிய பேரூராட்சி பகுதிகளில் திமுக சார்பில் திண்ணை பிரசார ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நகர, ஒன்றிய, பேரூர், ஊராட்சி வாரியாக மக்களவைத் தொகுதி தேர்தல் குறித்த திண்ணை பிரசார ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஆர். புதுப்பட்டி- பட்டணம் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் மரத்தடியில், தரையில் அமர்ந்து கட்சி நிர்வாகிகள், பொதுமக்களிடம் ஆலோசனை நடத்தினர்.
இதில் மத்திய சுகாதாரத்துறை முன்னாள் இணை அமைச்சரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான செ. காந்திசெல்வன் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா. பழனிசாமி, கட்சியின் தலைமை நிலைய தேர்தல் பணிக்குழு செயலாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் பங்கேற்று, புதிய உறுப்பினர் சேர்ப்பு, மக்களவைத் தேர்தல் பணியாற்றுவது, திமுக திட்டங்களை பிரசாரம் செய்வது போன்றவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் ராசிபுரம் ஒன்றிய திமுக செயலர் கே.பி. ஜெகந்நாதன், பேரூர் செயலாளர்கள் பொன். நல்லதம்பி, ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.