சட்டவிரோத மது விற்பனை கடை: பொதுமக்கள் எதிர்ப்பு
By DIN | Published On : 04th January 2019 08:52 AM | Last Updated : 04th January 2019 08:57 AM | அ+அ அ- |

பெரியமணலியை அடுத்துள்ள குமரவெளிபாளையம் கிராமத்தில் சட்ட விரோதமாக கடை அமைத்து மது விற்பனை செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் ராசிபுரம் பிரதான சாலையில் சாலை மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
குமரவெளிபாளையம் கிராமத்தின் பிரதான சாலையை ஒட்டி தொண்டிபட்டியைச் சேர்ந்த பிரகாஷ் (43), ரமேஷ் (40) ஆகியோர் தகர கொட்டகை அமைத்து அரசு அனுமதி இன்றி மதுபுட்டிகளை விற்பனை செய்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் முன்னாள் தொண்டிபட்டி ஊராட்சித் தலைவர் சுப்ரமணியத்திடம் (60)தெரியப்படுத்தி உள்ளனர்.
அதையடுத்து கொட்டகையில் இருந்தவர்களிடம் அரசு அனுமதி இல்லாமல் மதுபுட்டிகள் விற்பனை செய்யக் கூடாது என கண்டித்துள்ளார்.
அதனால் ஆவேசமடைந்த பிரகாஷ் மற்றும் ரமேஷ் சுப்ரமணியத்தை தாக்கியதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த சுப்ரமணியம் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தாக்கியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்கக் கோரியும் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல் குறித்து தகவல் அறிந்த எலச்சிபாளையம் காவல் துறையினர் பொதுமக்களிடம் சட்ட விரோதமாக மதுபான விற்பனை செய்யப்படும் கொட்டகை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
இதற்கிடையில் போராட்டக்காரர்கள் தன்னை தாக்கியதாக பிரகாசும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.சுமார் ஒருமணி நேரம் நடைபெற்ற இந்த மறியல் காரணமாக வாகனப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. தக்க நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் தெரிவித்ததை அடுத்து பொதுமக்களின் மறியல் போராட்டம்
கைவிடப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...