ஜன.11 இல் பயறு வகை சாகுபடி பயிற்சி
By DIN | Published On : 04th January 2019 08:54 AM | Last Updated : 04th January 2019 08:54 AM | அ+அ அ- |

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 11-ஆம் தேதி காலை 9 மணிக்கு பயறுவகை பயிர்கள் சாகுபடி முறைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெறுகிறது.
இதுகுறித்து வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் என். அகிலா வெளியிட்ட செய்திக்
குறிப்பு:
பயறுவகை சாகுபடியின் முக்கியத்துவம், உளுந்து, பாசிப்பயறு, துவரை, தட்டைப்பயறு பயிர்களின் சாகுபடி முறை, புதிய ரகங்கள் மற்றும் சிறப்பியல்பு, விதை நேர்த்தி, இடைவெளி, உரம், களை, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, நீர்ப்பாசன முறை, விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கப்படுகின்றன. விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள், நேரிலோ அல்லது 04286 - 266345, 266650 என்ற எண்களிலோ தொடர்பு கொண்டு, பெயரை முன்பதிவு செய்ய வேண்டும்.
நோய்க்கொல்லி மருந்து தயாரித்தல் பயிற்சி: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் இயற்கை விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் இயற்கை வேளாண்மைக்குத் தேவையான உயிர் பூச்சி மற்றும் நோய்க்கொல்லி மருந்துகள் தயாரித்தல் குறித்து 6 நாள் பயிற்சி, 28 ஊரக இளைஞர்கள் மற்றும் இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
இப் பயிற்சி வரும் 28-ஆம் தேதி முதல் பிப்ரவரி 2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இயற்கை வேளாண்மை, இயற்கை விவசாயத்தில் உயிர் பூச்சி மற்றும் நோய்க் கொல்லி மருந்தின் முக்கியத்துவம், இயற்கை உயிர் கொல்லிகளான சூடோமோனாஸ், டிரைகோடெர்மா விரிடி, என்.பி.வி. வைரஸ் பேசில்லஸ், வெர்டிசிலீயம், பேவேரியா உயிர் கொல்லி மருந்து தயாரிக்கும் முறை குறித்துப் பயிற்சி அளிக்கப்படும்.
மேலும் தரக்கட்டுப்பாடு, மரவள்ளி மற்றும் பப்பாளி மாவு பூச்சியைக் கட்டுப்படுத்தும் இயற்கை உயிர் பூச்சி தயாரித்தல், வீட்டு தோட்ட காய்கறி பயிர்களுக்கான இயற்கை பூச்சி கட்டுப்பாட்டு முறை, வேளாண் மற்றும் தோட்டக் கலை பயிர்களில், இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகள் குறித்துப் பயிற்சி அளிக்கப்படுகின்றன.
ஆர்வமுள்ள கிராம வேளாண் இளைஞர்கள், இயற்கை விவசாயிகள் 04286-266345, 266650 என்ற எண்ணில் தொடர்பு கொண்டோ, அடையாள அட்டையுடன் நேரில் வந்தோ, பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.