தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க அறிவுறுத்தல்
By DIN | Published On : 04th January 2019 08:56 AM | Last Updated : 04th January 2019 08:56 AM | அ+அ அ- |

தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியக்கூடிய நெகிழிப் பொருள்களை கடந்த 1-ஆம் முதல் தயாரிக்கவும், விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்படுவதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல்வர் அறிவித்தார்.
இதன்படி ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியக் கூடிய நெகிழிப் பொருள்களுக்குத் தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு மாற்றாக 14 வகையான பொருள்களை பயன்படுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனால் உற்பத்தியாளர்கள், மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள், வணிகர்கள், அனைத்து விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களைச் சேகரித்து வைக்காமல், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் (நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி) ஒப்படைக்கலாம்.
தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்களை பொது இடங்களில் தூக்கி எறியாமல் உள்ளாட்சி அமைப்புகள் அல்லது பதிவு செய்யப்பட்ட மறுசுழற்சி நிறுவனங்களிடம் ஒப்படைப்பதன் மூலம் பாதுகாப்பான முறையில் மறுசுழற்சி செய்ய தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் இதுகுறித்த விவரங்களுக்கு உதவி மையத்தை 04286-280722 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.