பிரேத பரிசோதனையில் தாமதம்: அரசு மருத்துவமனை முற்றுகை
By DIN | Published On : 04th January 2019 08:56 AM | Last Updated : 04th January 2019 08:56 AM | அ+அ அ- |

குமாரபாளையம் அருகே புடவை கழுத்தை இறுக்கியதில் உயிரிழந்த சிறுமியின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்வதில் கால தாமதம் ஏற்பட்டதால், உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குமாரபாளையம் கத்தேரி பிரிவைச் சேர்ந்தவர் சின்னசாமி (43). விசைத்தறித் தொழிலாளி. இவரது மகள் பிரியதர்ஷினி (11). இவர், வேமன்காட்டுவலசு அரசு தொடக்கப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
பள்ளி முடிந்து புதன்கிழமை வீட்டுக்கு வந்த இவர், வீட்டின் கதவைத் தாழிட்டுக் கொண்டு புடவையில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் ஆடியுள்ளார். அப்போது, எதிர்பாராமல் புடவையில் கழுத்து இறுக்கியதால் மயங்கியுள்ளார்.
இதை அப்பகுதியினர் கண்டு அதிர்ச்சியடைந்ததோடு, கதவை உடைத்துச் சென்று பார்க்கையில் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த குமாரபாளையம் போலீஸார், சடலத்தைக் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்வதில் மருத்துவர்களுக்கிடையே வியாழக்கிழமை ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காலதாமதம் ஏற்பட்டது.
மேலும், சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு சிறுமியின் சடலத்தை அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நிகழ்விடத்துக்கு விரைந்த போலீஸார், சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், சமாதானம் அடைந்ததைத் தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனால், குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் வளாகத்தில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.