மேக்கேதாட்டு அணை திட்டத்தை கைவிட கர்நாடகத்துக்கு சோனியாகாந்தி அறிவுறுத்தக் கோரிக்கை
By DIN | Published On : 04th January 2019 08:51 AM | Last Updated : 04th January 2019 08:57 AM | அ+அ அ- |

மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி அறிவுறுத்த வேண்டும் என வெண்ணந்தூர் நகர காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் நகர காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நகரத் தலைவர் கே. சிங்காரம் தலைமையில் வெண்ணந்தூரில் அண்மையில் நடைபெற்றது. நகரச் செயலர் பி.கே. செங்கோடன், செயற்குழு உறுப்பினர்கள் பி. ராமலிங்கம், பி.வஜ்ரவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: வெண்ணந்தூரில் வசிப்பவர்கள் இறந்துவிட்டால் அங்குள்ள ஏரியில் எரியூட்டி வந்தனர். இப்போது அந்த ஏரியில் சுமார் ரூ. 3 கோடி மதிப்பில் பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.
இதனால் இங்கு இறந்தவர்களை எரியூட்ட நவீன எரி மேடையை அரசு அமைத்துக் கொடுக்க வேண்டும். வெண்ணந்தூர் 4-ஆவது வார்டு செக்கான்காடு பகுதியில், சாக்கடை கழிவு நீர் செல்ல வழியில்லாமல் தேங்கி உள்ளது. எனவே, பொதுமக்களின் சுகாதார நலன் கருதி சாக்கடை வசதி செய்துதர வேண்டும்.
தமிழக விவசாயிகளின் நலன் கருதி, மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி அறிவுறுத்த வேண்டும்.
கட்டுமான பொருள்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெண்ணந்தூரில் ஈமச்சடங்குகள் செய்ய பாதுகாப்பான இடம் இல்லை. பெண்கள் திறந்தவெளியில் குளிக்கின்ற அவல நிலை உள்ளது. பெண்கள் பாதுகாப்பாக குளிப்பதற்கு அறைகள் கட்டிக் கொடுக்க வேண்டும்.