திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக-திமுக இடையேதான் போட்டி: அமைச்சர் பி. தங்கமணி

திருவாரூர் இடைத்தேர்தலை பொருத்தவரை அதிமுக-திமுக இடையேதான் போட்டி நிலவுகிறது என்றார்

திருவாரூர் இடைத்தேர்தலை பொருத்தவரை அதிமுக-திமுக இடையேதான் போட்டி நிலவுகிறது என்றார் மின்சாரம்,  மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி.
கஜா புயல் பாதிப்பால் சேதமடைந்த மின் கம்பங்கள்,  கோபுரங்கள், மின்மாற்றிகள் சீரமைக்கும் பணிகளில் மின் வாரியப் பணியாளர்கள் ஈடுபட்டபோது, கடந்த ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில், நாமக்கல் மாவட்டம் மானுவக்காட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மின் வாரிய ஊழியர் சி.முருகேசன் என்பவர் மின் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
 அவரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியாக ரூ. 13 லட்சத்துக்கான காசோலையை மின்சாரம்,  மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி,  சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் வெ.சரோஜா ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை வழங்கினர்.
மொத்தம் ரூ. 15 லட்சம் நிவாரணத்தில் ஏற்கெனவே ரூ. 2 லட்சம் காசோலையாக அந்தக் குடும்பத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் பி. தங்கமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் தரமான பாதுகாக்கப்பட்ட குடிநீர் பொதுமக்களுக்கு அளிக்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.  மற்றுமொரு திட்டமாக நகராட்சிப் பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை குறைந்த விலையில் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட  20 லிட்டர் குடிநீர் ரூ. 7-க்கு அளிக்கப்படும்.  தமிழக முதல்வர் அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்புத் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை எவ்வாறு வழங்க வேண்டும் என்று தெளிவான அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளார்.  எனவே, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு ஓரிரு நாள்களில் முழுமையாகக் கிடைத்து விடும்.
விவசாய விளைநிலங்கள் வழியே உயர் அழுத்த மின்தடம் அமைக்கும் பணிகளில்,  ஒருபக்கம் இழப்பீடு தொகையை விவசாயிகள் பெற்று வந்தாலும்,  ஒரு சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  எதிர்க்கட்சியினரின் தூண்டுதலாலும் இதுபோன்ற போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் உயர் அழுத்த மின் பாதை திட்டத்தை பூமிக்கடியில்தான் செயல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி கூறி வருகின்றன.  இதுகுறித்து மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு விளக்கம் அளித்தேன்.  இந்த விவகாரத்தில் மேலும் பேச்சுவார்த்தை நடத்த அரசு திறந்த மனதுடன் உள்ளது.  விவசாயிகளைப் பாதிக்கும் வகையில் எந்தத் திட்டத்தையும் அரசு செயல்படுத்தாது.
   மின் வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.380 ஊதியம்,  பணி நிரந்தர கோரிக்கை குறித்து விரைவில் பரிசீலிக்கப்படும்.  தேர்தல் பயம் காரணமாகவே, அதிமுக இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை என்று டி.டி.வி.தினகரன் கூறுகிறாரே?  என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்,   திருவாரூர் இடைத்தேர்தலைப் பொருத்தவரை அதிமுக-திமுக இடையேதான் போட்டி நிலவுகிறது.  முதல்வர்,  துணை முதல்வர் கூறியுள்ளதுபோல,  எந்தத் தேர்தல் வந்தாலும் எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது. அவற்றில் 100 சதவீதம் அதிமுக வெற்றி பெறும்.  அதிமுக வேட்பாளர் இன்னும் ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படுவார்.  டி.டி.வி. தினகரன்தான் பயம் கொண்டு முன்கூட்டியே வேட்பாளரை அறிவித்துவிட்டு, பொய்யான தகவல்களைக் கூறி வருகிறார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com