தொடக்கக் கல்வித் துறையை மீண்டும் தனி அலகாக செயல்படுத்தக் கோரிக்கை
By DIN | Published On : 07th January 2019 08:58 AM | Last Updated : 07th January 2019 08:58 AM | அ+அ அ- |

தொடக்கக் கல்வித் துறையை மீண்டும் தனி அலகாக செயல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
கூட்டணி மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் ரா. நடேசன் தலைமையில் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநில செயற்குழு உறுப்பினர் ரா. முத்துக்குமார், மா.செந்தில்ராஜா, க.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிபாளையம் வட்டாரச் செயலர் தி. பிரபு வரவேற்றார். மாநிலத் துணைச் செயலர் வெ. அண்ணாதுரை கோரிக்கைகள் குறித்துப் பேசினார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தொடக்கக் கல்வித் துறையை, பள்ளிக் கல்வித் துறையோடு இணைப்பதையும், தொடக்கப் பள்ளிகளை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளோடு இணைக்கும் செயல்பாட்டையும் உடனடியாக நிறுத்த வேண்டும்.
தொடக்கக் கல்வித் துறையை மீண்டும் தனி அலகாக செயல்படுத்தி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் வட்டார உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் பணியிடங்களை முன்புபோல் ஏற்படுத்த வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வித் துறையில் போதுமான அளவு இணைய வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
கற்பித்தல் பணிகளைத் தவிர வேறு பணிகளை ஆசிரியர்களுக்கு வழங்கக் கூடாது, பள்ளிகளில் குழுப் பார்வை என்பது ஆசிரியர்களை அவமதிப்பதாகவும், அச்சமடைய செய்வதாகவும் உள்ளது.
பள்ளிகளைக் கண்காணிப்பது, ஆய்வு செய்யும் பணியை கல்வித் துறை சார்ந்த வட்டார, மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரம் உள்ள கல்வித் துறை அதிகாரிகள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். ஆய்வு செய்ய குழுக்களை அமைக்கக் கூடாது.
மத்திய அரசில் பணியாற்றும் ஆசிரியர்கள் அரசு அலுவலர்களுக்கு போனஸ் தொகையாக ரூ. 9,000, உச்சவரம்புத் தொகையாக ரூ. 3,000 வழங்கப்படுகிறது. அதேபோல், தமிழக ஆசிரியர்கள், அரசு அலுவலர்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டச் செயலாளர் வே. அண்ணாதுரை, மாநில செயற்குழு உறுப்பினர்கள் மா. அருண்குமார், வை. மாதேஸ்வரன், வட்டாரச் செயலாளர்கள் ச. சரவணன், நந்தகுமார், செந்தில்குமார் உள்பட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் தி. சேகர் நன்றி கூறினார்.