வழிப்பறி வழக்கு: இளைஞர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
By DIN | Published On : 07th January 2019 08:57 AM | Last Updated : 07th January 2019 08:57 AM | அ+அ அ- |

வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் சனிக்கிழமை உத்தரவிட்டார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உஞ்சனை பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் (32). பெயிண்டர். இவர் கடந்த மாதம் 7-ஆம் தேதி மொபட்டில் குமரமங்கலம் பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த திருச்செங்கோடு கைலாசம்பாளையத்தைச் சேர்ந்த சிவசங்கர்(33) என்பவர் கத்தி முனையில் ரூ. 600 மற்றும் அரை பவுன் மோதிரத்தை பறித்துச் சென்றார்.
இதுதொடர்பாக மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் திருச்செங்கோடு ஊரக காவல் நிலைய ஆய்வாளர் ஆரோக்கியராஜ் வழக்குப் பதிவு செய்து சிவசங்கரை கைது செய்தார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிவசங்கர் மீது மல்லசமுத்திரம் காவல் நிலையத்தில் ஆள்கடத்தல் வழக்கு ஒன்றும், பரமத்தி காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளன.
தொடர்ந்து சிவசங்கர் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்ததால், அவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை ஏற்று சிவசங்கர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்து ஆட்சியர் மு. ஆசியா மரியம் உத்தரவிட்டார்.