நாமக்கல்லில் ரூ.1 கோடியில் பாரத மாதா கோயில் கட்டுமானப் பணி
By DIN | Published On : 03rd July 2019 09:59 AM | Last Updated : 03rd July 2019 09:59 AM | அ+அ அ- |

நாமக்கல்லில் ரூ.ஒரு கோடியில் பாரத மாதா கோயில் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நாமக்கல்லில் பாரத சேவா அறக்கட்டளை சார்பில், பாரத மாதாவுக்கு கோயில் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த கோயிலானது நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள பெரியூர் கிராமத்தில் அமைகிறது. ரூ.ஒரு கோடியில் மேற்கொள்ளப்படும் இக்கோயிலில் பாரத மாதா சிங்கத்தின் மீது அமர்ந்திருப்பது போன்று சிமென்ட், செங்கற்களால் ஆன சிலை உருவாக்கப்படுகிறது. தற்போது முதல் கட்டப்பணிகள் தொடங்கியுள்ளன.
இதுகுறித்து பாரத சேவா அறக்கட்டளை நிர்வாகக் குழுவில் இடம் பெற்றுள்ள குரு மூவீஸ் மணி கூறியது: தமிழகத்தில் முதன்முறையாக நாமக்கல் அருகே பெரியூரில் ஒரு ஏக்கர் பரப்பளவில் ரூ.ஒரு கோடியில் பாரத மாதாவுக்கு கோயில் மற்றும் சிலை அமைப்பதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளோம். தற்போது சிலை அமைப்புக்கான ஆரம்பக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆசிரமம் வடிவில் இந்த கோயிலானது உருவாக்கப்படுகிறது. இன்னும் சில மாதங்களில் பணிகள் முடிவுற்று, பொதுமக்கள் வந்து செல்லும் வகையில் பாரத மாதா கோயிலானது அமைந்திருக்கும்.
அண்மையில் சின்மயா மிஷனைச் சேர்ந்த சுவாமி ராமகிருஷ்ணானந்தாஜி கோயில் வடிவமைப்பை நேரடியாக பார்த்து, பணிகள் சிறப்புற வாழ்த்தினார். இதற்கென உள்ள அறக்கட்டளை சார்பிலேயே இக் கோயிலானது உருவாகிறது என்றார்.