முதியோர் காப்பகத்தில் ஆட்சியர் ஆய்வு
By DIN | Published On : 03rd July 2019 09:59 AM | Last Updated : 03rd July 2019 09:59 AM | அ+அ அ- |

பரமத்தி வேலூர் வட்டம், கொந்தளத்தில் சமூக நலத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் வேர்டு முதியோர் காப்பகத்தினை மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் மத்திய அரசின் முதியோருக்கான ஒருங்கிணைந்த திட்டத்தின் மானியத்துடன் இயங்கும் முதியோர் காப்பகம் ஒன்றும், மாநில அரசின் மானியத்துடன் இயங்கும் முதியோர் காப்பகம் இரண்டும் என மொத்தம் மூன்று காப்பகங்கள் அரசின் மானியத்துடன் செயல்பட்டு
வருகின்றன.
மத்திய அரசின் நிதியுடன் முதியோர்களுக்கான ஒருங்கிணைந்த திட்டத்தின் வாயிலாக இயங்கும் கொந்தளம் காந்தி நகரில் வேர்டு நிறுவனத்தின் மூலம் முதியோர்களுக்கான காப்பகம் இயங்கி வருகிறது. இந்த காப்பகத்தில் நாமக்கல் மாவட்டம் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து 15 ஆண்களும், 13 பெண்களும் என மொத்தம் 28 முதியோர்கள் தங்கி
உள்ளனர்.
இந்த காப்பகத்தினை செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்ட ஆட்சியர், ஆண், பெண் இருபாலருக்கும் தனியாக அறை வசதி உள்ளதா என்றும், ஒவ்வொருவருக்கும் தனித்தனியே படுக்கை வசதி, பொருள்கள் வைக்க இடவசதி, இருபாலருக்கும் தனியாக கழிப்பறை வசதிகள், சுற்றுப்புற சுகாதார நிலை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
இந்த முதியோர் காப்பகத்தில் தங்கி உள்ள முதியோர்களை காப்பகத்தில் உள்ளவர்கள் நன்கு கவனித்து கொள்கின்றார்களா, உணவு சரியாக வழங்கப்படுகிறதா, உடல் நல, மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறதா என அனைவரிடமும் கேட்டறிந்தார். மேலும், முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள அனைவருக்கும் வயது அதிகமாக உள்ளதால், அவர்களின் உடல்நிலைக்கேற்ப உதவிகளை மேற்கொள்ளுமாறு முதியோர் இல்ல நிர்வாகி மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, மாவட்ட சமூக நல அலுவலர் அன்பு, முதியோர் இல்ல நிர்வாகி சிவகாமவள்ளி உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...