ஏ.டி.எம். மையத்தில்பேட்டரிகள் திருடியவர் கைது
By DIN | Published On : 09th June 2019 04:39 AM | Last Updated : 09th June 2019 04:39 AM | அ+அ அ- |

ராசிபுரம் பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்தில் பேட்டரிகள் திருடிய ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
ராசிபுரம் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் அறையில் வைக்கப்பட்டிருந்த பதினாறு பேட்டரிகளை சில நாள்களுக்கு முன்பு மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டதாக ராசிபுரம் கிளை ஸ்டேட் வங்கியின் மேலாளர் யோகிந்தர் குமார் ராசிபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதனையடுத்து, அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா மூலம் பார்த்தபோது, 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் பேட்டரிகளை எடுத்து ஆட்டோவில் கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து ஆட்டோ உரிமையாளர் செந்தில்குமார் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் ஆட்டோவை வாடகைக்கு எடுத்துச் சென்று பேட்டரிகள் திருடிய ஆத்தூர் பழனியாபுரி தெற்கு தெருவைச் சேர்ந்த ராயர் என்பவரின் மகன் சதீஷ்குமார் (31) என்பவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இவர் ஏடிஎம் மையத்தில் 16 பேட்டரிகள் திருடியதை ஒப்புக்கொண்டார்.
இதனை அவர் ரூ.8 ஆயிரத்துக்கு விற்பனை செய்துள்ளார். அவரிடம் இருந்து ரூ.76 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும், அவர் இதேபோல் ஆத்தூர், வாழப்பாடி, பெரம்பலூர், துறையூர், கள்ளக்குறிச்சி, சேலம், அம்மாப்பேட்டை, சூரமங்கலம் போன்ற காவல் நிலைய எல்லைகளிலும் திருட்டு வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.