பொறியியல் படிப்பிற்கான சான்றிதழ் சரிபார்ப்பு: மாணவ, மாணவியர் ஆர்வம்
By DIN | Published On : 09th June 2019 05:24 AM | Last Updated : 09th June 2019 05:24 AM | அ+அ அ- |

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில், பொறியியல் படிப்பிற்கான சான்றிதழ் சரிபார்ப்பு வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் 12 - ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் கல்லூரியில் சேர்ந்து பொறியியல் படிக்க விரும்பும் மாணவ, மாணவியர் கடந்த மே 1-ஆம் தேதி முதல் 31 - ஆம் தேதி வரை இணையதளம் மூலமாக விண்ணப்பித்தனர்.
மேலும், 42 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு அரசு பொறியியல் கல்லூரிப் பேராசிரியர்கள் உதவியுடன் விண்ணப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வகையில், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில், 4,098 பேர் விண்ணப்பித்தனர். பொறியியல் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு ஜூலை 3 - ஆம் தேதி முதல் 28 - ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு, மாநிலம் முழுவதும் உள்ள 42 மையங்களில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. வரும் புதன்கிழமை(ஜூன் 12) நிறைவு பெறுகிறது.
நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்புக்காக, மாணவ, மாணவியர் தங்களது பெற்றோருடன் வந்திருந்தனர். அதற்கென அமைக்கப்பட்டிருந்த அறைக்குள் ஒவ்வொருவராக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தப் பணியானது, கல்லூரி முதல்வர் கு.சுகுணா தலைமையில் நடைபெற்றது. இப்பணியில் 10 ஆசிரியர்களும், நான்கு மேற்பார்வையாளர்களும் இடம் பெற்றிருந்தனர். வெள்ளிக்கிழமை மட்டும் 680 மாணவ, மாணவியர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்திருந்தனர் என கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.