மோகனூர் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் சேர ஜூன் 12-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்
By DIN | Published On : 09th June 2019 04:37 AM | Last Updated : 09th June 2019 04:37 AM | அ+அ அ- |

மோகனூர் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்க்கை பெற மாணவ, மாணவியர் வரும் புதன்கிழமைக்குள் (ஜூன் 12) விண்ணப்பிக்க வேண்டும்.
இது தொடர்பாக, அக் கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) பெரியசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்டம், மோகனூரில் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை பாலிடெக்னிக் கல்லூரி, கடந்த 1984 - ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது, தற்போது 2018 - 19 ஆம் கல்வியாண்டு முதல் தமிழக அரசால் அரசினர் பல்தொழில்நுட்பக் கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இங்கு, அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல், கணினி பொறியியல் ஆகிய 5 பாடப் பிரிவுகள் உள்ளன. இக் கல்லூரியில் சேர்ந்து பயில ஆண்டு கட்டணம் ரூ.2,172 - மட்டுமே. நடைமுறையில் உள்ள அரசின் அனைத்து சலுகைகளும் உண்டு.
அரசு தொழிற் பயிற்சி நிலையம் மற்றும் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியர் நேரடியாக இரண்டாமாண்டு சேர்ந்து கல்வி பயில அரசால் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவங்கள் தற்போது கல்லூரியில் வழங்கப்பட்டு வருகின்றன. இதை பெற்று பூர்த்தி செய்து வரும் புதன்கிழமைக்குள் (ஜூன் 12) சமர்ப்பிக்க வேண்டும். மேலும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் முதலாமாண்டில் சேர்ந்து கல்வி பயிலவும் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. இதனை சமர்ப்பிக்க கடைசி தேதி ஜூன் 28-ஆம் தேதி ஆகும். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.150 மட்டுமே. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு விண்ணப்பப் படிவத்துக்கு கட்டணம் கிடையாது. மேலும் தகவலுக்கு, கல்லூரி அலுவலக தொலைபேசி 04286- 255211, செல்லிடப்பேசி 94899-00258 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.