வீடுகளை திறந்து நகை திருடிய பெண் கைது
By DIN | Published On : 09th June 2019 05:23 AM | Last Updated : 09th June 2019 05:23 AM | அ+அ அ- |

நாமக்கல், கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் வீடுகளை திறந்து நகை திருடிய பெண்ணை பரமத்தி போலீஸார் கைது செய்து அவரிடமிருந்து 5 பவுன் நகை மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
பரமத்தி அருகே உள்ள மாவுரெட்டியைச் சேர்ந்த பிரபாகரன் மனைவி மஞ்சமாதா (26). இவர் கடந்த மே மாதம் 31 - ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு கோயிலுக்கு சென்றுள்ளார். மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்த போது பீரோ திறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் தங்க நகை காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து பரமத்தி போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதேபோல் பரமத்தி அருகே உள்ள கோனூர் கந்தம்பாளையத்தைச் சேர்ந்த கந்தசாமி மனைவி சரஸ்வதி (55). இவர் வெள்ளிக்கிழமை காலை நூறு நாள் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த போது பீரோ திறந்துகிடந்துள்ளது. பீரோவில் வைத்திருந்த 2 பவுன் நகை காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து சரஸ்வதி பரமத்தி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்த இரு திருட்டு வழக்குகள் குறித்தும் நாமக்கல் காவல்துறை கண்காணிப்பாளர் அர. அருள்அரசு உத்தரவின்பேரில் பரமத்தி வேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பழனிசாமி மேற்பார்வையில், பரமத்தி காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு திருட்டு வழக்கில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் சனிக்கிழமை பரமத்தி காவல் நிலையத்துக்கு உள்பட்ட கீரம்பூர் பேருந்து நிறுத்தம் அருகே பரமத்தி போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த பெண்ணை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில் அவர் முன்னுக்குபின் முரணாகப் பேசியுள்ளார். இதனையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கரூர் என்.எஸ்.கே. நகரைச் சேர்ந்த தர்மராஜ் மனைவி ரமணி (29) என்பதும், பரமத்தி பகுதியில் இரு வீடுகளை திறந்து தங்க நகைகளை திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரைக் கைது செய்து அவரிடம் இருந்த இரு சக்கர வாகனம் மற்றும் 5 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் வீடுகளின் கதவுகளை பூட்டிவிட்டு சாவியை அருகே வைத்துச் செல்வதை நோட்டமிட்டு, அந்த சாவியை எடுத்து வீட்டினுள் சென்று நகை மற்றும் பணத்தை திருடிவிட்டு மீண்டும் வீட்டை பூட்டிவிட்டு சாவியை எடுத்த இடத்திலேயே வைத்துச் செல்வது தெரியவந்தது.
மேலும் அவர் கரூர்,நாமக்கல் மற்றும் ஈரோடு பகுதிகளில் பல்வேறு திருட்டு வழக்களில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.