மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு காப்பகங்களில் சேர்த்த இளைஞர்கள்!

பரமத்தி வேலூர் வட்டம், பரமத்தியில் மனநலம் பாதிக்கப்பட்டு  தெருக்களில் சுற்றித்திரிந்த  5 பேரை  மீட்டு,  அவர்களுக்கு உணவு, உடை அளித்து,  உரி
Updated on
1 min read


பரமத்தி வேலூர் வட்டம், பரமத்தியில் மனநலம் பாதிக்கப்பட்டு  தெருக்களில் சுற்றித்திரிந்த  5 பேரை  மீட்டு,  அவர்களுக்கு உணவு, உடை அளித்து,  உரிய காப்பகங்களில்  சேர்த்த  இளைஞர்களை அப்பகுதி மக்கள்  பாராட்டி வாழ்த்தினர்.  
பரமத்தியில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சாலைகளில் பொதுமக்களிடம் பிச்சை எடுத்தும்,   இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் சுற்றித் திரிந்த  5 பேரை,  குமாரபாளையத்தைச்  சேர்ந்த  அட்சயம் அறக்கட்டளையைச்  சேர்ந்த  இளைஞர்கள்  மற்றும் பெண்கள் மீட்டு,   அவர்களுக்கு  முடி திருத்தம் செய்தும், புத்தாடை அணிவித்தும், உணவு வழங்கியும் உரிய காப்பகங்களில் கொண்டு சேர்த்த சம்பவம் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த  அறக்கட்டளையை நிறுவிய நவீன்குமார்,  குமாரபாளையத்திலுள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2014 - ஆம் ஆண்டு அறக்கட்டளை ஒன்றை தொடங்கி செயல்படுத்தி வருகிறார்.  வாரத்தின் இறுதி விடுமுறை நாள்களில் இந்த அமைப்பிலுள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் அடங்கிய குழுவினர் ஆதரவற்றோர்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். மேலும், மனநலம்  பாதிக்கப்பட்டோர்,  மனநலம் குன்றியோர்,  முதியோர்,  பிள்ளைகளால் கைவிடப்பட்டோர் என 19 வகையினராகப் பிரித்து அவரவர்களுக்கேற்ப ஆலோசனை  மற்றும்  மறுவாழ்வு வழங்கி வருகின்றனர். அறக்கட்டளை தொடங்கியது முதல்  3  ஆயிரத்துக்கும் மேற்பட்ட  நபர்களைச் சந்தித்து அவர்களது தகவல்களை சேகரித்து,  இதுவரை 340  நபர்களுக்கு ஆலோசனை வழங்கி உரிய காப்பகங்களில் சேர்த்துள்ளனர்.  இதில் நல்ல நிலையில் முன்னேற்றம் அடைந்தவர்களுக்கு வேலை வாய்ப்பும் ஏற்படுத்தித் தந்ததோடு மட்டுமல்லாமல் குடும்ப உறுப்பினர்களுடனும் சேர்த்துள்ளனர்.
தற்போது நாமக்கல், ஈரோடு, சேலம்,  சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 400 - க்கும் மேற்பட்ட  உறுப்பினர்களை கொண்டு இந்த அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. 
இவர்களின்  சமூக சேவையைப் பாராட்டி கடந்த வருடம் தேசிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் சார்பில் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து அக் குழுவில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரி ஆசிரியை மனிஷா கூறியதாவது:   இந்த  சமூக சேவையில் பெரும்பாலும் பெண்கள் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.  சமூகத்தில் உள்ள பல்வேறு சூழல்களுக்கு இடையே பெண்கள் ஆர்வத்துடன்  பங்கேற்று இந்த சேவையை செய்து வருகின்றனர். பெண்கள் சமூக நலனில் அக்கறை  எடுத்துக் கொள்ள அவர்களது பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். பொதுவாக  ஆண்களை விட பெண்களுக்கே அன்பான மனது இருக்கும்.  
ஆனால் பெண்களுக்கு  இருக்கும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி இதுபோன்ற சமூக சேவையில் ஈடுபட  முன்வர வேண்டும். எனவே இளைஞர்கள் நினைத்தால் எந்த ஒரு மாற்றத்தையும் உருவாக்க முடியும் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com