இளைஞர் தற்கொலை முயற்சி
By DIN | Published On : 06th March 2019 08:42 AM | Last Updated : 06th March 2019 08:42 AM | அ+அ அ- |

காதல் ஜோடியைத் தப்பிக்க வைக்கத் துணை புரிந்ததாகத் தெரிவித்து தாக்கப்பட்ட இளைஞர் தற்கொலைக்கு முயன்றார்.
திருச்சி மாவட்டத்துக்குள்பட்ட தொட்டியம் அருகேயுள்ள எம்.களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் செந்தில்குமார் (41). இவருடைய உறவுக்காரரான மணிவண்ணன் (25) என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்தாராம். இதற்கு துணையாக இருந்த செந்தில்குமார், காதலர்கள் அண்மையில் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு உதவி புரிந்தாராம்.
இந்தத் தகவலால் ஆத்திரமுற்ற பெண் வீட்டார், செந்தில்குமாரை காயப்படுத்தியதாகவும், அவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்ததாகவும் தெரிகிறது. இதனால் கவலையடைந்த செந்தில்குமார் செவ்வாய்க்கிழமை உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தாராம். உயிருக்கு ஆபத்தான நிலையில், நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக, காட்டுப்புத்தூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.