35,277 ரயில்வே பணியிடங்களுக்கான தேர்வு: விண்ணப்பிக்கும் முறை குறித்து மார்ச் 8-இல் பயிற்சி
By DIN | Published On : 06th March 2019 08:38 AM | Last Updated : 06th March 2019 08:38 AM | அ+அ அ- |

இந்திய ரயில்வே துறையில், 35,277 பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து விழிப்புணர்வு பயிற்சி நாமக்கல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 8) நடைபெறுகிறது.
இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
12-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு, ஜூனியர் கிளார்க், டைப்பிஸ்ட்- 4,319 பணியிடம், அக்கவுண்ட்ஸ் கிளார்க், டைப்பிஸ்ட்- 760 பணியிடம், ஜூனியர் டைம் கீப்பர் -17, ரயில்வே கிளார்க் -592 பணியிடம், கமர்சியல் டிக்கெட் கிளார்க்- 4,940 பணியிடம், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு டிராஃபிக் அசிஸ்டன்ட் -88, கூட்ஸ் கார்டு பணிக்கு 5,748, சீனியர் கமர்சியல் டிக்கெட் கிளார்க்- 5,638, சீனியர் கிளார்க் டைப்பிஸ்ட்- 2,873, ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டன்ட், டைப்பிஸ்ட்- 3,164, ஜூனியர் டைம் கீப்பர் -14, ஸ்டேஷன் மாஸ்டர்- 6,865 மற்றும் கமர்ஷியல் அப்ரண்டிஸ் -259 பணியிடம் என மொத்தம் ரயில்வே துறையில் 35,277 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதற்காக, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை, பாடத் திட்டம், தேர்வுக்கு படிக்க வேண்டிய நூல்கள், பயிற்சி முறை உள்ளிட்டவை தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.