ஒரே தொகுதியில் 2 இடங்களில் கொ.ம.தே.க. வேட்பாளரின் பெயர்: சுயேச்சை வேட்பாளர் புகார்
By DIN | Published On : 28th March 2019 09:14 AM | Last Updated : 28th March 2019 09:14 AM | அ+அ அ- |

நாமக்கல் தொகுதியில் போட்டியிடும், கொ.ம.தே.க. வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ், 2 இடங்களில் தனது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளதால், அவரது வேட்பு மனுவைத் தள்ளுபடி செய்யுமாறு மாவட்ட தேர்தல் அலுவலரிடம் சுயேச்சை வேட்பாளர் மனு அளித்தார்.
நாமக்கல் மக்களவைத் தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியைச் சேர்ந்த ஏ.கே.பி.சின்ராஜ் போட்டியிடுகிறார். இந்த நிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையின்போது, அ.தி.மு.க. வேட்பாளர் பி.காளியப்பனுக்கு எதிராக, தி.மு.க. சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. நீண்ட இழுபறிக்கு பின், அ.தி.மு.க.வேட்பாளரின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, தும்மங்குறிச்சியைச் சேர்ந்த எஸ்.செல்லத்துரை என்ற சுயேச்சை வேட்பாளர், கொ.ம.தே.க. வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ், ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில், பாகம் எண் 33 மற்றும் 39 என இரு இடங்களில் தனது பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்துள்ளார். எனவே, அவரது வேட்புமனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான மு.ஆசியா மரியத்திடம் புகார் மனு அளித்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...