நாமக்கல் நரசிம்மர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்
By DIN | Published On : 28th March 2019 09:15 AM | Last Updated : 28th March 2019 09:15 AM | அ+அ அ- |

நாமக்கல் நரசிம்மர் கோயிலில், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் சுவாமி ஊஞ்சல் உற்சவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள மலைக்கோட்டை ஒரே கல்லினால் ஆனது. இம்மலையின் மேற்கில், நாமகிரித்தாயார் உடனுறை நரசிம்மர் சுவாமி கோயிலும், கிழக்கில் அரங்கநாதர் கோயிலும் குடவறைக் கோயில்களாக உள்ளன. மேலும், நரசிம்மர் சுவாமி கோயிலுக்கு எதிரில் கைகூப்பி நின்றபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமி சன்னிதி உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், நரசிம்மர், அரங்கநாதர், ஆஞ்சநேயர் சுவாமி பங்குனி திருத்தேர் விழா வெகுவிமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 20-ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வாக, ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் நரசிம்மருக்கான திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, 22-ஆம் தேதி காலை நரசிம்மர் கோயில் தேரோட்டமும், பிற்பகல் அரங்கநாதர், ஆஞ்சநேயர் சுவாமி தேரோட்டமும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர். விழாவையொட்டி, கடந்த இரு வாரங்களாக தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதன்கிழை காலை 10 மணியளவில் புஷ்ப யாகமும், இரவு 8 மணிக்கு, நாமகிரித் தாயாருடன், சுவாமி ஊஞ்சல் ஆடும் வைபவமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். வியாழக்கிழமை(மார்ச் 28) இரவு 8 மணியளவில் ஊஞ்சல் உற்சவமும், திருத்தேர் திருவிழா நிறைவுவிழா மங்கள வாத்திய நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...