நாமக்கல் மக்களவைத் தொகுதி: 30 வேட்பு மனுக்கள் ஏற்பு
By DIN | Published On : 28th March 2019 09:13 AM | Last Updated : 28th March 2019 09:13 AM | அ+அ அ- |

நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனுக்கள் பரிசீலனையில், 30 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. ஆறு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல், கடந்த 19 - இல் தொடங்கி 26 - இல் நிறைவடைந்தது. அ.தி.மு.க. வேட்பாளர் பி.காளியப்பன், கொ.ம.தே.க. வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ் மற்றும் அவர்களது மாற்று வேட்பாளர்கள் உள்பட 36 பேர் தங்களது வேட்புமனுவை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான மு.ஆசியா மரியத்திடம் தாக்கல் செய்தனர். புதன்கிழமை நடைபெற்ற மனுக்கள் மீதான பரிசீலனையில், சுயேச்சையாக மனு தாக்கல் செய்த சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பி.மல்லிகா, கபிலர்மலையைச் சேர்ந்த எஸ்.டி.செந்தில்குமார், நாமக்கல் என்.கொசவம்பட்டியைச் சேர்ந்த எம்.சரவணன் ஆகியோரின் மனுக்கள் சரிவர பூர்த்தி செய்யாமலும், முன்மொழிந்தோரின் பெயர்களில் குளறுபடி இருந்ததாலும் நிராகரிக்கப்பட்டன. மாற்றுவேட்பாளர்களான ஆர்.கே.ராஜா, கே.மனோகரன், எஸ்.மாதேஸ்வரன் உள்ளிட்ட 3 பேரின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.
6 வேட்பு மனுக்கள் தள்ளுபடியான நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர் பி.காளியப்பன், கொ.ம.தே.க. வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ், அ.ம.மு.க. வேட்பாளர் பி.பி.சாமிநாதன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஆர்.தங்கவேலு, பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த ராமன், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பி.பாஸ்கரன், இந்திய கன்ஷிராம் கட்சியைச் சேர்ந்த எம்.பி.முத்துசாமி, உழைப்பாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த எஸ்.மாணிக்கம், அகிம்சா சோஷியலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தி.ரமேஷ் மற்றும் சுயேச்சைகள் எஸ்.எஸ்.ஆர்.சரவணவேல், பி.ஆர்.ரமேஷ், எம்.பெரியசாமி, என்.ராமசாமி, பி.ராமசாமி, பி.காளியப்பன், எஸ்.காளியப்பன், கே.காளியப்பன், என்.கே.எஸ்.சக்திவேல், கே.ஆர்.செல்வராஜ், சக்திவேல், எஸ்.செந்தில்முருகன், எம்.நல்லதம்பி, மு.நடராஜன், வி.வினோத்குமார், வி.ஆறுமுகம், வி.சோ, கே.பிரபு, எஸ்.செல்லதுரை, எஸ்.சிவராஜ், விஜயகார்த்திகேயன் உள்ளிட்ட 30 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி வரையில் மனுக்களை வாபஸ் பெற்றுக்கொள்ளலாம். வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு மேல், சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...