பரமத்தி வேலூர் ஏலச் சந்தையில் வாழைத்தார் ரூ.100 வரை விலை உயர்வு
By DIN | Published On : 28th March 2019 09:13 AM | Last Updated : 28th March 2019 09:13 AM | அ+அ அ- |

பரமத்தி வேலூர் வாழைத்தார் ஏலச் சந்தையில் வாழைத்தார்களின் விலை உயர்வடைந்துள்ளதால் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பரமத்தி வேலூர் காவிரிக் கரையோரப் பகுதிகளான வெங்கரை, குச்சிப்பாளையம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது.
இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. சிறு விவசாயிகள், பரமத்தி வேலூர் வாழைத்தார் விற்பனை சந்தைக்கு வாழைத் தார்களை நேரடியாகக் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு ஆயிரம் வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300 -க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.300 - க்கும், பச்சைநாடன் வாழைத்தார் ரூ.400 - க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.350-க்கும் விற்பனையாகின. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.6-க்கு விற்பனையானது. புதன்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400 - க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.400 - க்கும், பச்சைநாடன் வாழைத்தார் ரூ.500-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.450-க்கும் விற்பனையாகின. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.8-க்கு விற்பனையானது. பரமத்தி வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருவிழாக்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...