தீவனத்தில் செயற்கை மூலப்பொருள்கள் சேர்ப்பது அவசியம்: வானிலை ஆய்வு மையம்
By DIN | Published On : 30th March 2019 09:29 AM | Last Updated : 30th March 2019 09:29 AM | அ+அ அ- |

கோழிகளை பாதுகாக்க தீவனத்தில் செயற்கை மூலப்பொருள்களை சேர்ப்பது அவசியம் என கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வரும் நான்கு நாள்களுக்கு வெப்பநிலை அதிகபட்சமாக 102.2 டிகிரியாகவும், குறைந்தபட்சம் 77 டிகிரியாகவும் இருக்கும். காற்று மணிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் தெற்கில் இருந்து வீசக்கூடும்.
பண்ணையாளர்களுக்கான ஆலோசனை: வெப்ப அளவுகள் அதிகம் கொண்ட வாரமாக இருக்கக்கூடும். காற்றின் வேகம் குறையத் தொடங்கியுள்ளதால், கோழிகளுக்கு வெப்ப அயற்சியும், வெப்ப அதிர்ச்சியும் காணப்படும். தீவன எடுப்பு 90 முதல் 95 கிராம் வரையில் இருக்கும். குறைந்த தீவன எடுப்பை ஈடுகட்டும் விதத்தில், தீவனத்தில் அமினோ அமிலங்கள் குறிப்பாக மெத்தியோனின் சேர்த்து வர வேண்டும். வெப்ப அயற்சி நீக்கிகளான தாது உப்புக்கள், வைட்டமின் சி மற்றும் பீட்டைன் போன்ற செயற்கை மூலப்பொருள்களை சேர்த்து வருவது அவசியம்.
கடந்த வாரம் இவ்வாய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்ட இறந்த கோழிகள் பெரும்பாலும் வெப்ப அயற்சி காரணமாக இறந்துள்ளது தெரியவந்துள்ளது. எனவே, பண்ணையாளர்கள் அதற்கு தகுந்தாற்போல் சிறந்த கோடைகால மேலாண்மை முறைகளை கையாள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...