நாமக்கல் மாவட்டத்தில், பாலியல் குற்றங்களை தடுக்கவும், போக்ஸோ சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கவும், மாவட்ட அளவில் சிறப்பு காவல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குழந்தைகள் நலனை பிரதானமாகக் கொண்டு, பாலின வித்தியாசமின்றி, 18 வயதுக்குக் கீழ் உள்ள அனைத்துக் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
(The Protection of Children from Sexual Offenses (POCSO) Act, 2012) என்ற போக்ஸோ சட்டம், அனைத்துக் குழந்தைகளையும் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டமாகும். இச்சட்டம் வரும் முன்பு, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது 18 வயதுக்குக் கீழ் உள்ள அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவர்.
அதாவது, ஆண் குழந்தைகள், சிறுவர்கள் பாதிக்கப்பட்டாலும், இச்சட்டம் தலையீட்டு நடவடிக்கை மேற்கொள்ளும். பாலியல் தாக்குதல் வன்முறை, துன்புறுத்தல், சீண்டல், ஆபாசப் படமெடுக்க குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது.
இச்சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளில், 30 நாள்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஓராண்டுக்குள் வழக்கு முடிக்கப்பட வேண்டும் என்ற சட்ட விதி உள்ளது. மேலும், தண்டனை உறுதியாகும்பட்சத்தில் சாதாரண சிறைத் தண்டனையிலிருந்து, கடுங்காவல், ஆயுள் தண்டனை வரை கிடைக்க போக்ஸோ சட்டம் வழிவகை செய்கிறது. சிலவகை பாலியல் வன்முறைக்குக் கூடுதல் தண்டனையும் உண்டு.
உதாரணமாக, காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர், ராணுவம், அரசு அதிகாரிகள் போன்றவர்கள் பாதுகாவலர்கள் அல்லது நம்பிக்கைக்குரியவர்களே குற்றம் இழைக்கும்போது அதிக தண்டனை பெற்றுத்தர இச்சட்டம் வழிவகை செய்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க, காவல்துறை அலுவலர்களுக்கு செல்லிடப்பேசி வாயிலாகவும், நேரிலோ அல்லது தபால் மூலம், மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொண்டும் புகார்களை பதிவு செய்யலாம் என சென்னை, உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய போக்ஸோ கமிட்டிதெரிவித்துள்ளது.
எனவே, இச்சட்டத்தின் கீழ் குழந்தைகளை பாதுகாக்க, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய போக்ஸோ கமிட்டி மூலம் மாவட்ட அளவில் புகார் பெற சிறப்பு காவல் அதிகாரிகள்
நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் விவரம்: ஆர்.ராஜூ, துணைக் காவல் கண்காணிப்பாளர், மாவட்டக் குற்றப்பதிவேடு கூடம், நாமக்கல். செல்லிடப்பேசி எண்:94425-64942. பி.இந்திரா, காவல் ஆய்வாளர், அனைத்து மகளிர் காவல் நிலையம், ராசிபுரம். செல்லிடப்பேசி எண்:94981-68055. ஆ.திருமூர்த்தி, காவல் உதவி ஆய்வாளர், மாவட்டக் குற்றப் பதிவேடு கூடம், நாமக்கல். செல்லிடப்பேசி எண்:94981-68416. எஸ்.ராதா, காவல் உதவி ஆய்வாளர், நல்லிபாளையம் காவல் நிலையம், செல்லிடப்பேசி எண்:94981-74333 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.