அமாவாசை: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் பக்தர்கள் வழிபாடு
By DIN | Published On : 05th May 2019 05:15 AM | Last Updated : 05th May 2019 05:15 AM | அ+அ அ- |

அமாவாசையையொட்டி, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் சனிக்கிழமை ஏராளமான பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சுவாமியை தரிசிக்க, பல்வேறு மாவட்டத்தினரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து செல்கின்றனர். சித்திரை மாத அமாவாசை வெள்ளிக்கிழமை தொடங்கி சனிக்கிழமை நிறைவு பெற்றது. மற்ற அமாவாசையைக் காட்டிலும், சனிக்கிழமை வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்தது என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இதனால் ஏராளமான பக்தர்கள் ஆஞ்சநேயர் சுவாமியை தரிசிக்க சனிக்கிழமை அதிகாலை முதலே காத்திருந்தனர். காலை 10 மணிக்கு மேல் சுவாமிக்கு பால், இளநீர், திரவியம், தேன், வெண்ணெய் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்கக்கவசம் சாத்தப்பட்டது. இதையடுத்து கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியைத் தரிசித்து சென்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்ததால், போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...