உணவகத்தில் சப்ளையர் கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி: பரோட்டா மாஸ்டரிடம் விசாரணை
By DIN | Published On : 15th May 2019 08:31 AM | Last Updated : 15th May 2019 08:31 AM | அ+அ அ- |

நாமக்கல்லில் உணவகத்தில் ஏற்பட்ட திடீர் மோதலில், சப்ளையர் கழுத்தை அறுத்த பரோட்டா மாஸ்டரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள உணவகம் ஒன்றில், திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், வீரமாச்சான்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (45), கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். நாமக்கல் கீழப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் (45), கடந்த ஓராண்டாக பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மது போதையில் இருந்த ஞானசேகரன், வெங்காயம் வெட்டுமாறு கிருஷ்ணமூர்த்தியிடம் கூறியதாக தெரிகிறது. சப்ளை செய்து கொண்டிருந்த அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ஞானசேகரன், அங்கு வெங்காயம் வெட்டுவதற்காக வைத்திருந்த கத்தியை எடுத்து கிருஷ்ணமூர்த்தியின் கழுத்தை அறுத்துள்ளார். இதையடுத்து, உணவகத்துக்குள் அவர் ரத்தம் சொட்ட, சொட்ட சுருண்டு விழுந்தாராம்.
அங்கு சாப்பிட வந்தவர்கள் கூச்சலிட்டதைத் தொடர்ந்து, கடை உரிமையாளர் இளங்கோவன், நாமக்கல் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். மேலும், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தியை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கழுத்தை அறுத்த ஞானசேகரனை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.