திருச்செங்கோட்டில் 48 பள்ளி வாகனங்கள் தகுதி இழப்பு
By DIN | Published On : 15th May 2019 08:29 AM | Last Updated : 15th May 2019 08:29 AM | அ+அ அ- |

திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குள்பட்ட 620 பள்ளி வாகனங்களில் இரண்டாம் கட்டமாக செவ்வாய்க்கிழமை 191 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் 48 வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படாததாலும், விதிகளை பின்பற்றாததாலும் அதிகாரிகள் தகுதி இழப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
பேருந்தில் சென்று படிக்கும் மாணவ, மாணவியர் பாதுகாப்புடன் சென்று வர பள்ளிப் பேருந்துகளுக்கு பல்வேறு பாதுகாப்பு நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இது முழுமையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்யும் வகையில், தமிழக போக்குவரத்து துறை சார்பில் பள்ளி வாகனங்கள் ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்படுகின்றன.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குள்பட்ட மல்லசமுத்திரம் அருகே உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில், பல்வேறு தனியார் பள்ளி வாகனங்களை திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் ப.மணிராஜ், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆர்.வெங்கடேசன் ஆகியோர் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர். அப்போது, தமிழ்நாடு சிறப்பு மோட்டார் வாகனச் சட்டம் 2012-இன்படி, தனியார் பள்ளிப் பேருந்துகளின் தரம், பிரேக், முதலுதவிப் பெட்டி, அவசரகால வழி பிளாட்பாரம், புட்போர்டு, டயர்கள், சீட்டுகள், வேக கட்டுப்பாட்டுக் கருவி ஆகியவை தரமாக உள்ளனவா?, பள்ளி வாகன ஓட்டுநர் உரிமம், வாகனச் சான்று, வாகனக் காப்பீடு ஆகியவை உள்ளதா என்பது குறித்தும், 19 அம்சங்கள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
நாமக்கல் மாலட்டம், திருச்செங்கோடு கோட்டத்தில் 620 பள்ளி வாகனங்கள் உள்ளன. இதில் இரண்டாம் கட்ட ஆய்வின்போது 231 பள்ளி வாகனங்கள் ஆய்வு எடுத்துக்கொள்ளப்பட்டு சோதனை செய்யப்பட இருந்தது. அதில் 191 வாகனங்கள் பங்கேற்றன. இதில் அவசர கால கதவு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் காரணமாக 48 வாகனங்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டன. தகுதி இழப்பு செய்யப்பட்ட வாகனங்கள் இம்மாத இறுதிக்குள் ஆய்வுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வாகனச் சோதனையில், திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முத்துசாமி, ஈஸ்வரமூர்த்தி, குணசேகரன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.