நாமக்கல் மாவட்டத்தில் நீர் இல்லாததால் குறைந்து வரும் வேளாண் பரப்பு

போதிய மழையில்லாதது, நிலத்தடி நீர்மட்டம் சரிவு, காவிரி ஆற்றில் இருந்து பாசனத்துக்குரிய நீர்

போதிய மழையில்லாதது, நிலத்தடி நீர்மட்டம் சரிவு, காவிரி ஆற்றில் இருந்து பாசனத்துக்குரிய நீர் கிடைக்காதது போன்றவற்றால், நாமக்கல் மாவட்டத்தில் வேளாண் பரப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.
ஆசிய கண்டத்தில் வேளாண் துறையில் இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக திகழ்ந்த தஞ்சாவூர் பகுதியில் போதிய மழையில்லாததால் அண்மைக்காலமாக அங்கு பயிரிடுவது குறைந்துள்ளது. காவிரி படுகையில் அமைந்துள்ள தஞ்சை மட்டுமின்றி, அதையொட்டிய 12 மாவட்டங்களிலும் இதே நிலை தான்.
நாமக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை, பள்ளிபாளையம் முதல் மோகனூர் ஒருவந்தூர் வரையில் காவிரி ஆற்றை நம்பியே அப்பகுதி விவசாயிகள் கரும்பு, வெற்றிலை, வாழை, நிலக்கடலை, மரவள்ளிக் கிழங்கு, நெல், சோளம், கம்பு உள்ளிட்டவற்றை பயிரிட்டு வருகின்றனர். அவற்றைத் தவிர்த்து, ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதி விவசாயிகள் மழையையும், கிணற்று நீரையும் நம்பியே உள்ளனர். மாவட்டத்தின் சராசரி மழையளவு 716 மில்லி மீட்டர். கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையில் மழைப் பொழிவானது சராசரியை எட்டிவிட்டது என்றே கூறலாம்.
ஆனால், கடந்த மூன்று மாதத்தில் கொளுத்திய வெயிலில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. 600 அடியில் ஆழ்துளைக் கிணறு அமைத்த நிலையில், தற்போது 1,200 அடிக்கு மேல் ஆழ்துளை போட வேண்டியிருக்கிறது. மேலும், கிணறுகளில் போதிய நீர் இல்லாததால், 8 ஆயிரம் லிட்டர் நீரை, ரூ.1,500 முதல் ரூ.2 ஆயிரம் வரை விலை கொடுத்து லாரிகள் மூலம் வாங்கி, பயிர்களை காப்பாற்றும் சூழலில் விவசாயிகள் உள்ளனர்.
கடந்த 2006-07-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 26,516 ஹெக்டேரில் பயிரிட்ட நெல்லானது, தற்போது 2,189 ஹெக்டேரில் மட்டுமே பயிரிடப்படுகிறது. அதேபோல், 99,516-இல் பயிரிட்ட மக்காச்சோளம், 10,791 ஹெக்டேரில் பயிரிட்ட சோளம் உள்ளிட்டவையும், மொத்த ஏக்கரில் 40 சதவீதம் வரையில்  குறைந்து விட்டதாக வேளாண் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க பொதுச் செயலரும், விவசாயியுமான மலைவேப்பங்குட்டை எம்.ஜி.ராஜேந்திரன் கூறியது: மழையில்லாததும், பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வழியில்லாததாலும், எனது தோட்டத்தில் இருந்த 15 தென்னை மரங்கள் கருகி விட்டன. அவற்றை அகற்றுவதற்கு மட்டும் ஒரு மரத்துக்கு ரூ.2,500 வரை செலவானது.
மேலும், கொல்லிமலை அடிவாரப் பகுதியில் உள்ள காரவள்ளி, வாழவந்திநாடு, நடுக்கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட மாமரங்கள் கருகி வீணானதால், அதன் மகசூலை நம்பியிருந்த விவசாயிகள் நஷ்டமடைந்தனர்.
விவசாயிகள் தங்களது பயிர்களை பாதுகாக்க நிலங்களில் சிறிய அளவிலான குழிகளை அமைத்தால் மழை நீர் மூலம் நிலத்தடி நீர்மட்டம் சுமார் 10 ஆயிரம் லிட்டர் வரையில் உயரக்கூடிய வாய்ப்புள்ளது என்றார். 
வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியது: நாமக்கல் மாவட்டத்தில், மற்ற பயிர்களைக் காட்டிலும், மரவள்ளி, நிலக்கடலையே அதிகம் பயிரிடப்படுகின்றன. தற்போது மழை பற்றாக்குறை இருப்பது உண்மை தான். விவசாயிகள் பயிரிடுவதை அதிகரிக்கும் பொருட்டு சொட்டு நீர்ப் பாசன முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதற்காக 453 வருவாய் கிராமங்களை தேர்வு செய்து, ஒவ்வோர் விவசாயிடத்திலும் சென்று சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க வலியுறுத்தி வருகிறோம்.
கடந்த ஆண்டில், 5,041.75 ஹெக்டேரில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்கப்பட்டது. நிகழாண்டில், 4 ஆயிரம் ஹெக்டேரை இலக்காக கொண்டுள்ளோம். ஒரு ஏக்கர் நிலமும், ஆழ்துளைக் கிணறும் இருந்தால் இப்பாசன முறையை செயல்படுத்த முடியும். இதுவரை, 100 சதவீத மானியத்தில், 4,451 விவசாயிகளுக்கு ரூ.1,967.06 லட்சத்தில் சொட்டு நீர்ப் பாசனம் அமைப்பதற்கான கருவிகள், பிரதம மந்திரி கிரிஷி சின்சாயா யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com