நாமக்கல்லில் ரூ.30 லட்சத்தில் சிலம்பொலியார் நினைவு நூலகம்: கொங்கு நாட்டு வேளாளர் சங்கம் முடிவு
By DIN | Published On : 15th May 2019 08:29 AM | Last Updated : 15th May 2019 08:29 AM | அ+அ அ- |

நாமக்கல்லில் மறைந்த தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பன் நினைவாக ரூ.30 லட்சத்தில் ஆராய்ச்சி நிலையம், நூலகம் அமைக்க கொங்கு நாட்டு வேளாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்துக்குள்பட்ட சிவியாம்பாளையத்தைச் சேர்ந்த சிலம்பொலி செல்லப்பன் (91), கடந்த ஏப்ரல் 6-இல் உடல் நலக்குறைவால் காலமானார்.
தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டை பாராட்டும் வகையில், நாமக்கல் தமிழ்ச் சங்கம் சார்பில் புகழஞ்சலி நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. சாகித்ய அகாதெமி விருதாளர் சிற்பி பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் பேசினர்.
இந்த நிகழ்வில், நாமக்கல் கொங்கு நாட்டு வேளாளர் சங்கத்தின் செயலர் பி.கே.வெங்கடாசலம் பேசுகையில், " நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள கொங்கு திருமண மண்டபம் அருகில் உள்ள வணிக வளாகத்தில் சிலம்பொலியார் நூலகம் ஏற்படுத்தப்படும்' என அறிவித்தார்.
இது தொடர்பாக, அவர் மேலும் கூறியது: -
நாமக்கல் கொங்கு வேளாளர் சங்கத்துக்குள்பட்ட 45 ஏக்கர் பரப்பில், திருமண மண்டபம், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகம் உள்ளிட்டவை இருக்கின்றன. இந்தச் சங்கத்தில் 180-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த 11-ஆம் தேதி சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில், சிலம்பொலியாரின் நினைவை போற்றும் வகையில், ஆராய்ச்சி நிலையம், நூலகம், இந்திய குடிமைப் பணி தேர்வு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வுக்கான பயிற்சி மையம் அவரது பெயரில் உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.
இதனடிப்படையில், சங்க நிதியில் இருந்து ரூ.30 லட்சத்தில், நாமக்கல்-பரமத்தி சாலையில் கொங்கு திருமண மண்டபம் அருகில் உள்ள வணிக வளாகத்தில் பிரம்மாண்ட நூலகம் உருவாக்கப்படுகிறது. சிலம்பொலி சு.செல்லப்பனாரின் பிறந்த நாளான செப். 24-இல் நூலகம், ஆராய்ச்சி நிலையம் போன்றவை திறக்கப்படும் என்றார்.