மக்காச்சோளம், கரும்பு, தக்காளிப் பயிரில் படைப்புழு தாக்குதல்: ஆட்சியர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் மக்காச்சோளம், கரும்பு, நிலக்கடலை, பருத்தி உள்ளிட்டவற்றில் படைப்புழு தாக்குதல்

நாமக்கல் மாவட்டத்தில் மக்காச்சோளம், கரும்பு, நிலக்கடலை, பருத்தி உள்ளிட்டவற்றில் படைப்புழு தாக்குதல் இருப்பதால், அவற்றைக் கட்டுப்படுத்தும் வழி முறைகளை விவசாயிகள் அறிந்து கொள்ள வேண்டும் என நாமக்கல் ஆட்சியர் மு.ஆசியா மரியம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 9,500 ஹெக்டேர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மக்காச்சோளத்தில் படைப்புழுவின் தாக்குதல் கண்டறிப்பட்டது. இந்த படைப்புழுவானது நெல், சோளம், பருத்தி, நிலக்கடலை, கரும்பு, தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட 80 வகையான பயிர்களை தாக்கக் கூடியது. அனைத்து வட்டாரங்களிலும் படைப்புழுவின் தாக்குதல் பரவுவதற்கு முன் தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் வேளாண் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும்,  படைப்புழு கட்டுப்பாடு விழிப்புணர்வு முகாம் வாயிலாக விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.
படைப்புழுவினால் ஏற்படும் பாதிப்பு அறிகுறிகள்: தாய் அந்துப்பூச்சி 100-200 முட்டைகள் கொண்ட குவியல்களை பெரும்பாலும் இலையின் அடிப்பகுதியில் இடுகிறது. 
முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் இலைகளின் அடிப்பகுதியில் சுரண்டி சேதத்தை உண்டு பண்ணும். சேதத்தால் இலைகள் பச்சையம் இழந்து வெண்மையாக காணப்படும். இரவு நேரங்களில் அதிகமாக சேதத்தை விளைவிக்கும். மூன்று முதல் ஆறு நிலை புழுக்கள் இலையுறையினுள் சென்று பாதிப்பை உண்டாக்கும். இதனால் இலைகள் விரிவடையும் போது அதிக வரிசையாக துளைகள் தென்படும். மேலும், மக்காச்சோள கதிரை சேதப்படுத்தும். இதற்கு ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு முறைகளை மேற்கொள்வது அவசியம்.
கோடை உழவு செய்தல்: தற்போது பரவலாக பெய்து வரும் மழையினை பயன்படுத்தி விவசாயிகள் அனைவரும் கோடை உழவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மண்ணில் உள்ள படைப்புழுவின் கூட்டுப் புழுக்கள் அழிக்கப்படும். மேலும், மண்ணின் நீர்ப்பிடிப்புத் தன்மை அதிகரிக்கும். மண்ணின் மூலம் பரவும் பூஞ்சாண நோய்களை அழிக்கலாம்.  அனைத்து விவசாயிகளும் பருவத்தில் ஒரே சமயத்தில் விதைப்பு செய்ய வேண்டும். பல்வேறு நிலைகளில் விதைப்பு செய்தால், வளர்ச்சி நிலையில் உள்ள மக்காச்சோளப் பயிர்களில் படைப்புழுவின் தொடர் தாக்குதல் அதிகரிக்கும்.
படைப்புழு தாக்குதலை
குறைக்க: பெவேரியா பேசியானா ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் அல்லது தயோமிதாக்சம் கலந்து விதை நேர்த்தி செய்வதன் மூலம் படைப்புழு தாக்குதலை குறைக்கலாம். 
மக்காச்சோளம் விதைக்கும் போது அதனுடன் வயல் ஓரங்களில் தட்டைப்பயறு, சூரியகாந்தி, ஆமணக்கு சாமந்திப்பூ, எள் மற்றும் ஊடுபயிராக உளுந்து, பச்சைப் பயறு ஆகியவற்றை விதைப்பதன் மூலம் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
எனவே, அனைத்து விவசாயிகளும் கண்டிப்பாக ஊடுபயிர் மற்றும் வயல் ஓரப்பயிர், வரப்பு பயிர் சாகுபடி செய்ய வேண்டும்.  முட்டைக் குவியல்கள் கூட்டமாக காணப்படும் இளம்புழுக்களை கண்காணித்து அழித்திட வேண்டும். 
விவசாயிகள் பயிர் விதைத்த ஒரு வாரம் முதல் மூன்று அல்லது நான்கு தினங்கள் இடைவெளியில் வயல் முழுவதும் நடந்து கண்காணித்து இலையின் மேற்புறம் அல்லது பின்புறம் காணப்படும் முட்டைக் குவியல்கள் மற்றும் இளம்புழுக் கூட்டங்களை கையில் பொறுக்கி அழிக்க வேண்டும். விதைத்த நாள் அன்றே, ஹெக்டேருக்கு 12 எண்கள் வீதம் இனக்கவர்ச்சி பொறி வைப்பதன் மூலம் ஆண் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.  அதனால் இனப்பெருக்கம் தடுக்கப்பட்டு புழுத்தாக்குதல் வெகுவாக குறையும். மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகள் மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு முறைகளை கடைபிடித்து, படைப்புழுவினைக் கட்டுப்படுத்தி, அதிக மகசூல் பெற்றிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com