கோழிகளை கூண்டில் வளர்க்கும் நடைமுறைக்கு மத்திய அரசு எதிர்ப்பு: பண்ணையாளர்கள் கவலை
By DIN | Published On : 19th May 2019 07:36 AM | Last Updated : 19th May 2019 07:36 AM | அ+அ அ- |

கோழிகளை கூண்டில் வளர்க்காமல், வெட்ட வெளியில் விட்டு வளர்க்கும் நடைமுறையை பண்ணையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்ற மத்திய கால்நடைத்துறையின் உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாமக்கல் மண்டல பண்ணையாளர்கள் விரைவு அஞ்சல் மூலம் அவசரக் கடிதம் அனுப்பும் பணியை மேற்கொண்டுள்ளனர். உச்சநீதிமன்றம், இந்த உத்தரவை அமல்படுத்தக்கூடாது என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாடு முழுவதும், மும்பை, தில்லி, விஜயவாடா, ஹைதராபாத், பார்வாலா, ஹோஸ்பெட், பெங்களூரு, மைசூரு, நாமக்கல் உள்பட 28 முட்டை உற்பத்தி மண்டலங்கள் உள்ளன. சராசரியாக ஒவ்வொரு மண்டலத்திலும், குறைந்தபட்சம் 3.50 லட்சம் முட்டைகள் வரை உற்பத்தியாகின்றன. இதற்கென அமைக்கப்பட்ட தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு, வாரத்தில் திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் விலையை நிர்ணயம் செய்கிறது. கோடைகாலங்களைத் தவிர்த்து, இதர மாதங்களில் முட்டைத் தொழில் பாதிப்பின்றி நடைபெறும். சில மாதங்களுக்கு முன்பு, மத்திய கால்நடைத் துறை,
கோழிப் பண்ணைத் தொழில் செய்வோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கு அனைத்து பண்ணையாளர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்கும் தொடரப்பட்டது. தற்போது அவ்வழக்கானது நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், நாமக்கல் மண்டலத்தில் உள்ள 900 பண்ணையாளர்களும், மத்திய கால்நடைத்துறை துணை ஆணையர் எஸ்.கே.டுட்டாவுக்கு, கோழிப் பண்ணைத் தொழிலை பாதுகாக்கக் கோரி அஞ்சல் மூலமாக கடிதம் அனுப்பி வருகின்றனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பண்ணையாளர் ஒருவர் சுட்டிக்காட்டிய விளக்கங்களை, இங்குள்ள பண்ணையாளர்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். அதில், கோழிப்பண்ணைத் தொழிலுக்காக வகுக்கப்பட்டுள்ள சட்டத்திட்டங்கள் பற்றி விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், கோழிகளை வளர்க்க கூண்டைப் பயன்படுத்தாமல், வெட்ட வெளியில் விட்டு வளர்க்குமாறும், ஒரு பண்ணைக்கும் அடுத்த பண்ணைக்குமான இடைவெளி ஒரு கிலோ மீட்டர் இருக்க வேண்டும் என்ற அறிவிப்பு சாத்தியமற்றது என்ற கருத்தையும் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மட்டுமின்றி, பல்வேறு மண்டலங்களில் இருந்தும் இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட் ஆட்சேபனைக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதற்கான வழிகாட்டுதலில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவும் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து, நாமக்கல் மண்டல முட்டை உற்பத்தியாளர்கள் சங்க துணைச் செயலாளர் பி.தர்மலிங்கம் கூறியது: நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 900 கோழிப் பண்ணைகள் உள்ளன. சீதோஷ்ண நிலைக்கு ஏற்பவே முட்டைக் கோழிகளை வளர்க்க முடியும். பல்லடம் கறிக்கோழிகளை, நாமக்கல் பகுதியில் வளர்க்க முடியுமா? என்றால் சாத்தியமற்றது. நாமக்கல் மண்டலத்தில் ஐந்து கோடி முட்டைக் கோழிகள் உள்ளன. தினமும் 4.50 கோடி முட்டை உற்பத்தியாகின்றன. கோழிப் பண்ணைத் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், மத்திய அரசு சில சட்டத்திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
ஒரு கோழி வளர்க்க 550 சதுர அடி இடம் ஒதுக்க வேண்டும் என்கின்றனர், அவ்வாறு திட்டமிட்டால் ஒரு கோழிக்கு ரூ.750 செலவினமாகும். மேலும், வெட்ட வெளியில் மட்டுமே வளர்க்க வேண்டும். ஒட்டு மொத்தமாக வளர்க்கும் நடைமுறை, கூண்டில் அடைத்திருப்பது போன்றவற்றை மேற்கொள்ளக் கூடாது என்றும் கூறுகின்றனர். ஒன்று, இரண்டு கோழி என்பதை வெளியில் விட்டு வளர்க்கலாம். ஒட்டுமொத்தமாக வெளியில் விட்டால் விஷப்பூச்சிகளின் தாக்குதலுக்கு கோழிகள் ஆளாகும். ஆண்டுக்கு தற்போது 320 முட்டையிடும் கோழி, 150 முட்டையே இடும். கூண்டில் இருப்பதால், முட்டைகளை கோழிகள் சேதப்படுத்தாது. ஆனால் வெட்ட வெளி என்றால் முட்டையை கொத்தி வீணாக்கி விடுவதோடு, அவற்றின் மீது எச்சங்களை போடும். அவற்றைச் சுத்தம் செய்வதென்றால் பெரும்பாடாகி விடும். இவ்வாறு பல சிக்கல்கள் உள்ளன.
மத்திய கால்நடைத்துறை கொண்டு வந்துள்ள இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று தான் அனைத்து பண்ணையாளர்களும் போராடுகிறோம். தற்போது கடிதம் அனுப்பும் முறை சரியானது தான். உச்சநீதிமன்றம் கவனத்திற்கு சென்றால், இந்த திட்டத்தை ரத்து செய்வதற்கும் வாய்ப்புள்ளது. கூண்டில் அல்லாமல், வெட்ட வெளியில் வளர்க்க வேண்டும் என்ற முறை அமலாகிவிட்டால், தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலங்களில் கோழிப் பண்ணைத் தொழில் அடியோடு அழிந்து விடும். பண்ணையாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மத்திய அரசின் இந்த நடைமுறையை எதிர்த்தால் மட்டுமே இத்தொழிலை பாதுகாக்க முடியும் என்றார்.