தி.மு.க.எதிர்ப்பு: பரமத்திவேலூரில் அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ரத்து
By DIN | Published On : 19th May 2019 07:37 AM | Last Updated : 19th May 2019 07:37 AM | அ+அ அ- |

அரவக்குறிச்சி சட்டப்பேரைத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, அ.தி.மு.க. தேர்தல் வாக்குச்சாவடி முகவர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் பரமத்திவேலூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெறவிருந்தது.
தேர்தல் விதிமுறைகளை மீறி நடக்கவிருந்த இக்கூட்டத்துக்கு தி.மு.க.வினர் எதிர்ப்புத் தெரிவித்து சாலைமறியலில் ஈடுபட முயன்றதால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை (மே 19) வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் அ.தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் பரமத்திவேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறவிருந்தது. இக் கூட்டத்துக்காக காலை 9 மணி முதல் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் ராசிபுரம் எம்.பி., சுந்தரம் உள்பட 500 க்கும் மேற்பட்டோர் மண்டபத்துக்கு வந்துகொண்டிருந்தனர். இக்கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பரமத்திவேலூர் தி.மு.க. எம்.எல்.ஏ. கே.எஸ்.மூர்த்தி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அ.தி.மு.க.வினர் திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்துவதாகவும், அதனைத் தடுக்கக் கோரியும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் திருமண மண்டபத்தின் முன் கூடியிருந்த 50 - க்கும் மேற்பட்ட தி.மு.க. வினர் சாலை மறியலில் ஈடுபடப்போவதாகக் கூறினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பரமத்தி வேலூர் போலீஸார், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும் திருமண மண்டப வளாகத்துக்குள் வந்த பரமத்தி வேலூர் வட்டாட்சியர் ருக்மணி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸார் கூட்டத்தை ரத்து செய்யுமாறு கூறியதையடுத்து எம்.பி., சுந்தரம் உள்ளிட்ட அ.தி.மு.கவினர் கூட்டத்தை ரத்து செய்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.